பட மூலாதாரம், US STATE DEPARTMENT
இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மாவின் பெயரை அதிபர் பாரக் ஒபாமா முன்மொழிந்துள்ளார்.
செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியியுள்ளது.
இந்த நியமனத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் நிலையில், கடந்த மார்ச் மாதம் தனது தூதர் பதவியை ராஜினாமா நான்சி பாவெலுக்குப் பதிலாக அவர் பதவியேற்பார்.
அமெரிக்க செனட்டின் பாதுகாப்பு ஆலோசகராக வர்மா ஏற்கனவே பணியாற்றியுள்ளார்.
2008ஆம் ஆண்டில் இலினாய்ஸ் மாகாணத்தின் செனட்டராக ஒபாமா இருந்தபோது, அதிபர் தேர்தலுக்கான விவாதங்களில் பேசுவதற்கு வர்மா அவருக்கு உதவிபுரிந்திருக்கிறார் என ஊடகங்கள் கூறுகின்றன.
இவருடைய பெற்றோர் 1960களில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்தனர்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு “21ஆம் நூற்றாண்டை வரையறுக்கும் உறவுகளில் ஒன்றாக இருக்கும்” என 2010ஆம் ஆண்டில் அதிபர் ஒபமா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு எதிர்பார்த்த அளவு முன்னேறவில்லை. கடந்த ஆண்டு நியூயார்க்கில் இருந்த இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய தேவயானி கோப்ரகேட் என்ற அதிகாரி, விசா மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்தது.
அப்போதைய இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் நான்சி பாவல் தனது பதவியை ராஜினாமா செய்தார். சில நாட்களாகவே அவர் இதற்குத் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினாலும், தேவ்யானி விவகாரத்தின் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாக யூகங்கள் எழுந்தன.