இந்தியாவுடன் விளையாட மாட்டேம்: அடம் பிடிக்கும் பாகிஸ்தான், தூதுவிட்ட ஐசிசி – Kumudam

Spread the love

டி20 உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் வங்கதேச அணி ஏற்கனவே விலகி விட்டது. அவர்களுக்குப் பதில் ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஒரு விசித்திரமான முடிவை எடுத்துள்ளது. அதாவது, தொடரின் மற்ற போட்டிகளில் விளையாடுவோம், ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் பங்கேற்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. 

இருப்பினும், இந்த முடிவை இன்னும் அதிகாரப்பூர்வமாக ஐசிசி-யிடம் பாகிஸ்தான் சமர்ப்பிக்கவில்லை.பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்பது கிரிக்கெட்டின் நேர்மை மற்றும் சமநிலையைக் குலைக்கும் செயல்” என்று ஐசிசி சாடியுள்ளது. 

மேலும், இந்தியாவுடனான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணித்தால், அந்த நாட்டு வாரியத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 300 கோடி வருவாயைப் பிடித்து வைக்கவும் ஐசிசி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெருக்கடி முற்றியுள்ள நிலையில், பாகிஸ்தானைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஐசிசி தற்போது இறங்கியுள்ளது. 

இது தொடர்பாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜாவிற்கு ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தனது முடிவை மாற்றிக்கொண்டு, திட்டமிட்டபடி பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுடன் விளையாட வேண்டும் என்பதை வலியுறுத்த அவர் அந்நாட்டு வாரிய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *