இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்க பிரதமருக்கு துணை நிற்போம்: வானதி சீனிவாசன் | Vanathi Srinivasan Independence Day wishes

1295357.jpg
Spread the love

கோவை: இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை நிற்போம் என, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சுதந்திரம் அடைந்து 78-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். 1,000 ஆண்டுகளுக்கு மேல் அன்னிய நாட்டு ஆட்சியாளர்களி்டம் நாம் அடிமைப்பட்டு கிடந்தோம். கடைசியாக சுமார் 400 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டனர். இடைவிடாத போராட்டத்தின் விளைவாக 77 ஆண்டடுகளுக்கு முன் 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் பெற்றோம்.

மத அடிப்படையில் நம் நாடு இரண்டாக பிளக்கப்பட்டதால், சுதந்திர இந்தியா பிறப்பதற்கு முன்பே 1947 ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் பிறந்தது. அதனால் ஏற்பட்ட கலவரங்களில் 10 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். பல்லாயிரக்கணக்கான இந்து பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். 1947 தேசப்பிரிவினையின்போது நடந்த கொடூரங்கள் உலக வரலாற்றில் அதற்கு முன்பும் நடக்கவில்லை. பின்பும் நடக்கவில்லை.

தேசப்பிரிவினை கலவரங்கள் தந்த வலிகள், வேதனைகளையும் தாண்டி இன்று இந்தியா உலகின் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உருவெடுத்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியர்கள் என்றாலே விசா தர மறுத்த நாடுகள், இந்திய பாஸ்பார்ட்டை பார்த்தாலே விமான நிலையத்தில் ஏளனமாக பார்த்த நாடுகள் எல்லாம் இப்போது இந்தியர்கள் என்றால் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்து உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தாக நாடாக இருப்பது பெரும் சாதனை.

கடந்த 2020 தொடக்கத்தில் கரோனா நோய்தொற்றால் உலகமே முடங்கியது. மக்கள் நெருக்கும் அதிகம் உள்ள இந்தியா என்ன ஆகப் போகிறதோ என அனைவரும் கவலைப்பட்டனர். ஆனால், கரோனா நெருக்கடியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றிகரமாக எதிர்கொண்டதை பார்த்து உலகம் வியந்தது. தடுப்பூசிகளுக்காக உலகமே அமெரிக்கா, சீனாவை நம்பியிருந்த நிலையில் மோடி அரசு இரண்டு தடுப்பூசிகளை இந்தியாவிலேயே தயாரித்து சுமார் 80 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு செலுத்தியது.

பொருளாதாரம் தள்ளாடியபோதும் இந்தியா நிலைத்து நின்று சாதித்தது. கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் தான் வீடுகள் தோறும் கழிவறை, குடிநீர் குழாய் இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு, மின் இணைப்பு, அனைவருக்கும் வங்கி கணக்கு என, அத்தியாவசிய அடிப்படை வசதிகள் சாத்தியமாகியுள்ளன.

கிராமச் சாலைகள், நெடுஞ்சாலைகள், அதிவிரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில் பாதைகள், புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சுதந்திர இந்தியாவின் 78-வது ஆண்டில் இவற்றையெல்லாம் மக்களுக்கு நினைவுகூர விரும்புகிறேன். நேருவும் இந்திராவும் அரசியல் வாரிசுகள். அவர்களுக்கு கட்சித் தலைவர் பதவியும், பிரதமர் பதவியும் தாமாக வந்து சேர்ந்தன. ஆனால், மிகமிக சாதாரணமான குடும்பத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, ரயில் நிலையத்தில் தேநீர் விற்ற சூழலில் இருந்து உருவான நரேந்திர மோடி, நேரு, இந்திராவின் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

நேரு, இந்திராவுக்கு அடுத்து 11-வது முறையாக தேசியக் கொடியேற்றுகிறார். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு.

உலகின் முதல் பொருளாதார நாடாக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை நிற்போம். இந்தியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *