சென்னை: இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியை காண வரும் பார்வையாளர்களின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை நாளை நீட்டிக்கப்பட உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையே டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நாளை (25-ம் தேதி) நடைபெற உள்ளது. இப்போட்டியை பார்க்க வரும் பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் இரவு 12 மணிக்கு புறப்படும். சென்ட்ரல் – பரங்கிமலை வரையிலான பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும்
பயணிகள், சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் (நடைமேடை 3) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் வந்துவிட வேண்டும்.
கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்துக்கு இடையிலான சுற்று பயணத்தினை மேற்கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.