சென்னை: இந்தியா-இலங்கை உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் துரோகம் என்று மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபா் அனுரா திச நாயகாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது இந்தியா – இலங்கை இடையே ஏழு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அதில் முக்கியமானது, இந்தியா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்புப் புரிந்துணா்வு ஒப்பந்தம். அதன்படி,இரு நாட்டு ராணுவங்களின் கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும், உதவியும் வழங்கும். இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் ராணுவ புரிந்துணா்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
எங்கள் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை ராணுவம்தான். ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இலங்கை ராணுவம் கொன்றது.தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது இலங்கை ராணுவம்.