இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 2) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது.
இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக துனித் வெல்லாலகே 67 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, பதும் நிசங்கா 56 ரன்களும், வனிந்து ஹசரங்கா 24 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ், ஷிவம் துபே, குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். ஷுப்மன் கில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, விராட் கோலி 24 ரன்கள் எடுத்தும், வாஷிங்டன் சுந்தர் 5 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்ரேயாஸ் ஐயர் (23 ரன்கள்), கே.எல்.ராகுல் (31 ரன்கள்), அக்ஷர் படேல் (33 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்திய அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற சூழலில் ஷிவம் துபே சிக்ஸர் அடித்து அசத்தினார்.
இதன்மூலம், வெற்றிக்கு தேவையான ரன்கள் 8 ஆக குறைந்தது. அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. அசலங்கா ஓவரில் ஷிவம் துபே பவுண்டரி அடிக்க ஸ்கோர்கள் சமநிலைக்கு வந்தன. இருப்பினும், ஷிவம் துபே 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட இந்திய அணி அசலங்காவின் அசத்தலான பந்துவீச்சில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதன்மூலம் பரபரப்பாக சென்ற ஆட்டம் சமனில் முடிந்தது.