இந்தியா-சீனா எல்லையில் வீரர்களின் ரோந்துப் பணி தொடங்கியது!

Dinamani2f2024 11 012fgorugl9n2f20240928011l.jpg
Spread the love

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா – சீனா படை விலக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாட்டு வீரர்களின் ரோந்துப் பணிகள் தொடங்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெம்சோக் பகுதியில் இந்திய வீரர்கள் ரோந்துப் பணியை இன்றுமுதல் தொடங்கியுள்ள நிலையில், டெப்சாங் பகுதியில் விரைவில் ரோந்துப் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

கடும் மோதல்

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைத் தாண்டி வந்த சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். எத்தனை சீன வீரா்கள் உயிரிழந்தனா் என்ற சரியான தகவலை அந்நாடு இதுவரையில் வெளியிடவில்லை.

படைக் குவிப்பால் பதற்றம்

இந்த மோதலை தொடா்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருநாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களை குவித்தன. இதனால் இருநாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் பதற்றம் நீடித்து வந்தது.

எனினும், இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அந்த எல்லையில் சச்சரவுக்குரிய பல பகுதிகளில் இருந்து இருநாடுகளின் வீரா்கள் திரும்பப் பெறப்பட்டனா். ஆனால் அங்குள்ள டெப்சாங், டெம்சோக் போன்ற பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரா்கள் திரும்பப் பெறப்படவில்லை.

இதையும் படிக்க : ரயிலில் அசுத்தமான கழிவறை: பயணிக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

படை விலக்கல் ஒப்பந்தம்

கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரா்களை திரும்பப் பெறவும், அங்கு ரோந்து பணிகளை மேற்கொள்ளவும் இந்தியா, சீனா இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக கடந்த அக்டோபா் 21-ஆம் தேதி இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

கடந்த அக்டோபா் 23-ஆம் தேதி ரஷியாவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே அந்த ஒப்பந்தத்துக்கு பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் ஒப்புதல் அளித்தனா்.

இதன்படி டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து மட்டுமே இருநாட்டு படைகளை விலக்கிக்கொள்ள அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், எஞ்சிய பகுதிகளில் படை விலக்கல் மற்றும் ரோந்து பணிகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

படை விலக்கல் நிறைவு

கடந்த ஒரு வாரமாக ஒப்பந்தப்படி, இரு நாட்டு வீரர்களும் படைகளை விலக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்த நிலையில், புதன்கிழமை இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ரோந்து நடைமுறைகள் தொடா்பாக இரு நாடுகளின் களத் தளபதிகள் ஆலோசித்த நிலையில், இன்றுமுதல் அப்பணிகள் தொடங்கியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *