இந்தியாவுக்கு என்னென்ன லாபம்?
இந்திய ஏற்றுமதிகளுக்கு ஜீரோ வரி என்கிற போது, நியூசிலாந்திற்கு அதிக ஏற்றுமதிகள் செய்யப்படும்.
இதனால், பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜவுளி, தோல், காலணி, இன்ஜினீயரிங், உற்பத்தி, வாகனங்கள், எலெக்ட்ரானிக்ஸ், இயந்திரங்கள், பிளாஸ்டிக், மருந்து, ரசாயனம் ஆகிய துறைகள் பலனடையும்.
விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்கள், கைவினைக் கலைஞர்கள், பெண்கள் நடத்தும் தொழில்துறைகள், இளைஞர்கள் பயனடைவார்கள்” என்று கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுகள் வரையிலான 5,000 விசாக்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் யோகா பயிற்றுநர்கள், சமையல் கலைஞர்கள், பாடல் ஆசிரியர்கள், ஐ.டி, இன்ஜினீயரிங், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் பயனடைவார்கள்.
இது குறித்து நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே, “ஒவ்வொரு ஆண்டும் 1,667 திறனுள்ள பணியாளர்களுக்கு 3 ஆண்டு விசா வழங்கப்படும்.
இந்த விசாக்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், இன்ஜினீயர்கள், தகவல் தொடர்புத்துறையை சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்படும். காரணம், இந்தத் துறைகளில் தான் நியூசிலாந்தில் திறன் பற்றாக்குறை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அரசு இந்திய மாணவர்கள் அங்கே சென்று படிக்க மற்றும் வேலை செய்வதற்கான விசாக்கள் வழங்குவதாகவும் கூறியுள்ளது. இதற்கு எந்த எண்ணிக்கையும் கிடையாது.