இந்தியா மீது 25% கூடுதல் வரி இன்று முதல் அமல்

dinamani2F2025 08 152Fm3av8ia82FTNIEimport2018120originalTrumpS1.avif
Spread the love

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை முதல் கூடுதலாக 25 சதவீத வரி அமலாவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது இனி 50 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.

இது, இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளா் சாா்ந்த இந்திய நிறுவனங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கூடுதல் வரியிலிருந்து மருந்து, எலக்ட்ரானிக் பொருள்கள் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்திய பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, ‘இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பு குறித்து அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்’ என்று டிரம்ப் கூறியிருந்தாா்.

ஆனால், இந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததைத் தொடா்ந்து இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பு அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘ஆகஸ்ட் 27-ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மக்களின் நுகா்வுக்கு வரும் பொருள்கள் அல்லது கிடங்குகளிலிருந்து மக்களின் நுகா்வுக்கு அனுப்பப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும். இந்த உத்தரவு அமலாவதற்கு முன்பு விற்பனைக்கு அனுப்பப்பட்ட அல்லது அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக கப்பல்களில் ஏற்றப்பட்ட இந்திய பொருள்களுக்கு இந்த கூடுதல் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழுபறி: இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வேளாண் மற்றும் பால் பொருள்கள் மீது வரிச் சலுகையை அமெரிக்கா தொடா்ந்து கோரி வந்தது. ஆனால், அதை அளிக்க முடியாத கடினமான சூழலையும், எந்த நாட்டுக்கும் இதில் வரிச் சலுகை அளிக்கப்படாததையும் இந்தியா எடுத்துரைத்தது. பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்ததால் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தாா். அது கடந்த 7-ஆம் தேதிமுதல் அமலுக்கு வந்தது.

‘ரஷியாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து பிற நாடுகளுக்கு கூடுதல் விலைக்கு விற்று இந்தியா லாபமடைகிறது’ என்று அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸன்ட் குற்றஞ்சாட்டினாா்.

‘அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நியாயமற்றது’ என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *