“இந்தியைத் திணிக்க முயற்சி…” – மக்களவையில் இணை அமைச்சர் பதிலுக்கு சு.வெங்கடேசன் எதிர்வினை | Question in Lok Sabha on TN school education funding: Union Minister responds to Su Venkatesan MP

1354800.jpg
Spread the love

புதுடெல்லி: “தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கொண்டு போய் சேர்க்கும் இலக்கை கொண்டது. 2023 – 24-ல் ரூ.1,876 கோடி தமிழகத்துக்கு தரப்பட்டது. 2024-25-க்கு 4,305 கோடி நிதிக்கு திட்ட ஒப்புதல் குழு இசைவு தந்துள்ளது. தாய்மொழி கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் தருகிறது” என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி கூறியுள்ளார்.

மக்களவையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “சமக்ரா சிக் ஷா அபியான் திட்டத்துக்கான ரூ.2,154 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது ஏன்? தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்து இருக்கிறதா? ஏன் அந்த நிதி நிறுத்தப்பட்டுள்ளது? தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்தியைத் திணிக்க முயற்சிப்பது மொழி பன்மைத்துவத்துக்கு எதிரானது இல்லையா? இது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மாறானது இல்லையா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

‪இதற்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சவுத்ரி அளித்த பதிலின் விவரம்: “தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கொண்டு போய் சேர்க்கும் இலக்கை கொண்டது. 2023-24-ல் ரூ.1,876 கோடி தமிழகத்துக்கு தரப்பட்டது. 2024-25-க்கு ரூ.4,305 கோடி நிதிக்கு திட்ட ஒப்புதல் குழு இசைவு தந்துள்ளது.

தாய்மொழி கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் தருகிறது. மும்மொழிக் கொள்கையானது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமலாக்கப்படுகிறது. எந்த மொழியும் மாநிலத்தின் மீது திணிக்கப்படாது. மாணவர்களின் தெரிவின் அடிப்படையிலேயே மொழிகளை அவர்கள் கற்பார்கள்” என தெரிவித்தார்.

மத்திய இணை அமைச்சரின் பதில் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கூறியது: “கேட்கிற கேள்விகளை விட்டு விட்டு எதையோ சொல்லி திசை திருப்புகின்றனர். உண்மைகளை மறைத்து தகவல்களை கொடுப்பது என்ற உத்திகளை நாடாளுமன்ற பதில்களிலும் கடைப்பிடிக்கின்றனர். இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றுவதாகும். ‬

‪தேசிய கல்விக் கொள்கையை அமலாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் கையெழுத்திட மறுத்ததால் நிதியை நிறுத்தி இருக்கிறோம் என்பது குறித்த ஒரு வார்த்தை கூட அமைச்சரின் பதிலில் இல்லை. தாங்கள் செய்ததை வெளிப்படையாக அவர்களால் சொல்ல முடியவில்லை. முழுப் பூசணிக்காய் சோற்றுக்குள் இருந்து சிரிக்கிறது. ‬

‪நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை தருவது என்று சொல்லிவிட்டு, கல்விக்கான நிதியை நிறுத்தி வைப்பது என்கிற முரண் எவ்வளவு மோசடித்தனமானது, குரூரமானது. மக்களை ஏமாற்றுவது. இந்தியைத் திணிக்கவில்லை என்று அமைச்சர் தரும் விளக்கம், இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாக இருக்கும். ‬

‪இந்தித் திணிப்பை நியாயப்படுத்தி தினந்தோறும் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் தொடர்ந்து‬ பேசிக் கொண்டிருப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தி தெரியாவிட்டால் பேல்பூரி கூட சாப்பிட முடியாது என்ற அளவுக்கு அவர்களுடைய விவாதங்களின் தரம் இருக்கிறது. ‬

‪தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் தமிழ் மொழியில் படிக்கலாம் என்று அமைச்சர் சொல்கிறார். அப்படியானால் தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருந்து தானே முதலில் தாய்மொழிக் கல்வி துவங்கி இருக்க வேண்டும். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி சம்பந்தமான முடிவுகளை மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்கலாமா? என்ற கேள்விக்கும் அமைச்சரிடம் விடை இல்லை. ‬

‪எங்கு கேட்டாலும் பொறுப்பான பதில் கிடைக்காது என்ற மத்திய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத அணுகுமுறையின் உச்சம் நாடாளுமன்றத்திலும் வெளிப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *