சேலம்: ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் எக்காலத்திலும் அடிபணியாது, என்பதை முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிந்து கொள்ள வேண்டும்’, என சேலத்தில் நடந்த மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது.
நிறைவு நாளான நேற்று சேலம் குகை பகுதி அருகே உள்ள பெரியார் வளைவில் இருந்து செம்படை பேரணி தொடங்கி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நிறை வடைந்தது. அதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 101 பேர் கொண்ட புதிய மாநில குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் போராடும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிட்டது, தேய்ந்து விட்டது என முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவை நிச்சயம் தோற் கடிப்போம். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என கூறியதும் திமுகவிடம் பணம் பெற்றுவிட்டதாகவும், அக்கட்சிக்கு அடிபணிந்து விட்டதாகவும் பழனிசாமி சாடினார்.
கம்யூனிஸ்ட் கட்சியாருக்கும் எக்காலத்திலும் அடிபணியாது என்பதை அவர்அறிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா பேசியதாவது: இந்தியாவில் கான்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய அதே ஆண்டில் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது.
ஆனால், ஆர்எஸ்எஸ் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தால், அதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் சாவர்க்கர் ஆகிய இருவரை மட்டுமே அடையாளப்படுத்த முடியும். கம்யூனிஸ்ட் கட்சி சாதிய வேறுபாடுகளைக் கலைந்து சோசலிச நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டது.
இதற்காக ஆங்கிலேய அரசு சதிவழக்கு போட்டு சிறையில் அடைத்து பல்லாயிரக்கணக்கான தோழர் களை சித்திரவதை செய்தது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மதச்சார்பு கொள்கையுடன் செயல்பட்டு மக்களை பிளவுபடுத்தி வருகின்றன.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் நின்று பாஜக, ஆர்எஸ்எஸ்-யை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் வரவேற்புக் குழு செயலாளர் மோகன், நிர்வாகிகள் அமர்ஜித் கவுர், நாராயணா, ஆனிராஜா, சுப்பராயன், பெரியசாமி, ராமச் சந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.