சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 100 வயதாகும் நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு இருந்த நுரையீரல் பிரச்சினையால் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், நல்லகண்ணு கடந்த 10-ம் தேதி வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவர் நேற்று மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை டீன் சாந்தாராமனிடம் கேட்டபோது, “நல்லகண்ணுவுக்கு உணவு கொடுப்பதற்காக, அவரது வயிற்றுப் பகுதியில் ஒரு குழாய் பொருத்தப்பட்டது. அதில் அடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு வேறு எந்த பிரச்சினையும் இல்லை. நலமுடன் உள்ளார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார்” என்றார்.