இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி பரிசுத் தொகை

Dinamani2f2024 072fc6c7deba 4d93 4752 Aa5a 14a23dd9f36c2fmumbai.jpg
Spread the love

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 1 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கிய நிலையில், பிசிசிஐ ரூ.125 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பிசிசிஐயைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.11 கோடி வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் அறிவித்துள்ளார்.

முன்னதாக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நான்கு மும்பை வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அப்போது உலகக் கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றதற்கு முதல்வர் ஷிண்டே மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவின் சிறப்பான கேட்ச்சை அவர் குறிப்பாக பாராட்டினார். அத்துடன் வியாழன் அன்று தெற்கு மும்பையில் நடந்த இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு கூட்டத்தை திறம்பட நிர்வகித்த மும்பை காவல்துறையினரையும் முதல்வர் பாராட்டினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *