மதுரை: “இந்தி எதிர்ப்பில் அண்ணாவிடம் இருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை” என்று பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: “புதிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தி திணிப்பு நடைபெறுவதாக திமுக கபட நாடகம் ஆடி வருகிறது. இந்தியா முழுவதும் மூன்றாவது மொழியாக இந்தி கற்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கை. கேரளாவில் மும்மொழி கல்விக் கொள்கை அமலில் உள்ளது. தமிழக எல்லையில் கேரளா பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. 50 ஆண்டுகளில் தமிழை விட மலையாளம் மொழி பலமடங்கு வளர்ந்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியதில் நேர்மை இருந்தது. அண்ணா எந்த இந்தி பள்ளிக் கூடமும் நடத்தவில்லை. யாரும் இந்தியை திணிக்கவில்லை. ஏதாவது ஓர் இந்திய மொழியை 3-வது மொழியாக கற்றுக் கொள்ளுமாறு கூறுகிறோம். தமிழக பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா முழுவதும் தமிழை மூன்றாவது மொழியாக கொண்டு வருவோம். தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களில் தமிழை கற்றுக் கொடுக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது.
பிற மாநிலங்களில் தமிழ் மொழியை கற்பிக்க அம்மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைக்க வேண்டும். இந்தியா முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை ஏற்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை இந்தியா முழுவதும் தமிழை கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக அரசு பயன்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்ட வர திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? கல்வி மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. கல்வி பொதுப் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு.
மும்மொழிக் கொள்கையை ஏற்றதால் குஜராத் பொருளாதார ரீதியாக உச்சத்தை தொட்டுள்ளது. மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு நிலைப்பாடு எடுக்கின்றனர். இந்தி எதிர்ப்பில் அண்ணாவிடம் இருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை,” என்று அவர் கூறினார். அப்போது மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.