திமுகவும் போராட்டங்களை தீவிரப்படுத்தியது. மத்திய அரசு சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஜனவரி 26, 1965 கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரை அறிவித்தார். ஆனால், அவரை அந்தப் போராட்ட நாளுக்கு முன்னதாகவே காவல் துறை கைது செய்தது. இது திமுகவினரை இன்னும் கொந்தளிக்க வைத்தது.
தமிழகத்தில் பல இடங்களில், குறிப்பாக தலைநகர் சென்னை, தென்னகத்தில் மதுரை, மேற்கில் பொள்ளாச்சி என்று போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. திமுகவின் உத்வேகப் பேச்சுக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தது என்னவோ மாணவர்கள் தான். ஒரு கட்சி இளைஞர்களை அரசியல்மயமாக்குவதில் தான் வளர முடியும். அதற்குத் தோதாக அமைந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திமுக தன்னெழுச்சியாக வந்த மாணவர்கள் உள்பட மாணவ சமுதாயத்தை அரசியல்மயமாக்குவதில் சிறப்பாக தன்னை ஈடுபடுத்தியது. திமுகவின் இன்றைய பலத்துக்கு அன்று போடப்பட்ட ஆலமர விதை எனலாம்!
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிப்.10 1965 மற்றும் பிப்.12 1965 மறக்கக் கூடாதவை என்றே சொல்லலாம். பிப்.10 அன்று திருப்பூரில் ஒரு தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 19 வயது மாணவர் உயிரிழந்தார். அது மக்களை வெகுண்டெழச் செய்தது. காவல் நிலையமே கொளுத்தப்பட்டது. பிப்.10-ம் தேதி போலீஸ் தமிழகம் முழுவதும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்.
பிப்ரவரி 12-ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சக்கட்டம். அன்றைய தினம் தமிழகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பொள்ளாச்சி போராட்டத்தை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதாக பல்வேறு நூல்களிலும் தகவல்கள் உள்ளன.
இப்படியாக இந்தி எதிர்ப்புப் போராட்டம், திமுகவின் எழுச்சிக்கு வித்திட்டதோடு 1967-ல் அதை ஆட்சி அரியணையில் ஏற்றிய வாவ் வியூகமாக இருந்தது.

அணையாத அந்தத் தீ…
இந்தி எதிர்ப்புப் போராட்டம் இன்றளவு ஒழியவில்லை. கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை அதற்கு ஒரு சாட்சி.
“இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம். இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம்.
மொழிப்போர்க் களத்தில் முதல் பலியான மாவீரர்கள் நடராசன், தாளமுத்து எனத் தொடங்கி, 1965 மொழிப்போர்க் களத்தில் கீழப்பழுவூர் சின்னசாமி, சிவகங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற உயிர்த் தியாகங்களால் ஆதிக்க இந்தியிடமிருந்து தாய்மொழியாம் தமிழைக் காத்த வரலாறு, திராவிட இயக்கத்திற்கும் அதன் அரசியல் பேரியக்கமான திமுகவுக்கும் உண்டு.
ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் திமுக கட்சியினரின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.