“இந்தி கட்டாயம் அல்ல.. ஃபட்னாவிஸ் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | தமிழ்நாடு

Spread the love

Last Updated:

மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக்கியதை எதிர்த்து, முதல்வர் ஃபட்னாவிஸ் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று கூறினார். மு.க.ஸ்டாலின் மத்திய அரசு இதை அங்கீகரிக்குமா என கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில், புதியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருக்கும் மும்மொழிக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் அந்த மாநிலத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக்கியது. இதற்கு அம்மாநில அரசியல் கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

அதேபோல், மகாராஷ்டிரா மாநில அரசுக்கு மொழி ஆலோசனைக் குழு, மகாராஷ்டிராவில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுமாறு பரிந்துரை செய்தது. மேலும், மராத்தி, ஆங்கிலத்துடன் சேர்த்து 3ஆவது மொழியாக இந்தியை சேர்ப்பது மாணவர்களுக்கு சுமை எனவும் தெரிவித்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு கடிதமும் எழுதியது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மாநிலத்தில் மராத்தி மொழி கட்டாயம். இந்தி கட்டாயம் அல்ல. அதே சமயம் இந்தி மாற்று மொழியாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மூன்றாவது மொழியாக இந்தியைத் திணித்ததற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தற்போது மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்று தெரிவித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக பொதுமக்கள் பரவலாக கண்டனம் தெரிவித்ததன் மூலம் இது அவரது பதட்டத்தின் தெளிவான வெளிப்பாடு.

பிரதமரும், மத்திய கல்வி அமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும்:

* தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?

* அப்படியானால், தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா?

* கட்டாய மூன்றாவது மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகத்திற்கு நியாயமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.2,152 கோடியை மத்திய அரசு விடுவிக்குமா?” எனப் பதிவிட்டுள்ளார்.

தமிழ் செய்திகள்/தமிழ்நாடு/

“இந்தி கட்டாயம் அல்ல.. ஃபட்னாவிஸ் நிலைப்பாட்டை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கிறதா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *