இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல – கனிமொழி திட்டவட்டம் | Kanimozhi says Opposing Hindi imposition, constituency realignment is not for politics

1352637.jpg
Spread the love

சென்னை: இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை திமுக எதிர்ப்பது அரசியலுக்காக அல்ல. சுயமரியாதை, உரிமைக்குதான் திமுக குரல் கொடுக்கிறது என்று திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் பாஜக இல்லை என்றும் அவர் கூறினார்.

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திமுக மகளிர் அணி சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு, உதவிகளை வழங்கினார்.

பின்னர், அவர் பேசியதாவது: இந்தி திணிப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை அரசியலுக்காக திமுக எதிர்ப்பதாக விமர்சிக்கின்றனர். அது தவறு. சுயமரியாதை, உரிமைக்குதான் குரல் கொடுக்கிறோம்.

மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி தருவதாக மத்திய அரசு நிர்பந்தம் செய்கிறது. இது மிரட்டலா, இல்லையா. சுயமரியாதை உள்ள தமிழனால் அந்த மிரட்டலை ஏற்றுக்கொள்ள முடியுமா. அதனால்தான் முதல்வர் எதிர்க்கிறார்.

இங்கு மேடையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் இந்தி தெரியாது. ஆனால், நாடாளுமன்றத்தில் பேசுகிறோம், அங்கு உள்ளவர்களோடு பழகுகிறோம். இந்தி தெரியாததால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, எந்த நஷ்டமும் இல்லை. இந்தி படித்து யாருக்கும் லாபம் கிடைக்கவில்லை. தேவைப்பட்டால் படித்துக் கொள்வார்கள்.

இதேபோல, தொகுதி மறுசீரமைப்பு நடக்காமல் ஏன் அதுபற்றி பேசுகிறீர்கள் என பாஜகவினர் கேட்கின்றனர். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை சீரமைத்தால் தமிழகம் மிகப்பெரிய இழப்புக்கு ஆளாகும். பிரதிநிதித்துவம் குறையும்போது, தேர்தல் காலத்தில் பிரச்சாரத்துக்குகூட பாஜகவினர் வரமாட்டார்கள். 39 எம்.பி.க்கள் இருக்கும்போதே நம்மை மிரட்டி பார்க்கின்றனர். அந்த பிரதிநிதித்துவமும் குறைந்தால், நமக்கான உரிமையை எப்படி கேட்க முடியும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது’ என்று கூறுகிறாரே தவிர, ‘இதர வட மாநிலங்களுக்கு அதிகப்படுத்த மாட்டோம்’ என்று சொல்லவில்லை. இதை தெளிவுபடுத்த வேண்டும் என்றுதான் முதல்வர் கோருகிறார். தற்போது, தமிழகத்தின் அரசியல் களத்தில் பாஜக இல்லவே இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதல்முறையாக தமிழக நலன் கருதி கூட்டப்பட்டுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒருமித்த குரலில் உரிமைக்காக போராடுவது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

நிகழ்வில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., த.வேலு எம்எல்ஏ, திமுக மகளிர் அணி தலைவர் விஜயா தாயன்பன், செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *