‘இந்தி திணிப்பை கண்டித்து பிப்.25-ல் கண்டன ஆர்ப்பாட்டம்’ – திமுக மாணவர் அணி அறிவிப்பு | DMK student wing announces Protest

1351931.jpg
Spread the love

சென்னை: ‘இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பிப். 25ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது.

ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து பிப்ரவரி 25 அன்று, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு -தமிழ்நாடு (Federation of Students Organisation – Tamil Nadu) மற்றும் தி.மு.க. மாணவர் அணி சார்பில், பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக மாணவர் திமுக அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கத்துடனும், ஆதிக்க இந்தியை திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, கடந்த 21.02.2025 அன்று நடைபெற்ற மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் முதற்கட்ட போராட்டமாக, மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, வரும் 25.02.2025 அன்று தமிழ்நாடு மற்றும் புதுவை உள்ளிட்ட ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களில் ‘பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடைபெற உள்ளது.

தாய் மொழியாம் தமிழ் மொழியைக் காக்கின்ற வகையில், நமது கண்டனத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு உணர்த்தும் வகையிலும், ஒன்றிய அரசைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் அலுவலகங்களின் முன்பு பேரணியுடன் கூடிய ஆர்ப்பாட்டத்தை, மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்துபேசி ஒருங்கிணைந்து, மாணவர் அணியின் நிர்வாகிகள், தமிழ் மாணவர் மன்ற நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுடன் பெருந்திரளாக பேரணி சென்று ஆர்ப்பாட்டத்தை மாபெரும் எழுச்சியாக நடத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கழக மாவட்டத்தில் உள்ள கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகளையோ, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பில் உள்ள மாணவர் அமைப்புகளின் மாநில நிர்வாகிகளையோ சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து, கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றுகிற வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்ப்பாட்டத்தின் போது, சர்வாதிகார போக்கோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டிற்கு நிதி தராமல் கல்வியை சிதைக்கின்ற படுபாதக செயலில் ஈடுபட்டு வருவதையும், தொன்மை வாய்ந்த நம் தமிழ்மொழியை அழிக்க வேண்டுமென்ற பா.ஜ.க.வின் தீய நோக்கத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையிலும், யு.ஜி.சி. வரைவுக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும், மும்மொழிக் கொள்கையை திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தை மிக எழுச்சியுடன் நடத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *