‘இந்துக்கள் மீது ஏன் இத்தனை வன்மம்?’ – தமிழக அரசுக்கு இந்து முன்னணி கேள்வி | hindu munnadi slams dmk govt

1353195.jpg
Spread the love

சென்னை: “இந்துக்கள் ஆன்மிக மாநாடு நடத்துவதில் இந்த அரசு என்ன குறை கண்டது. ஏன் இந்துக்களின் மீது இத்தனை வன்மம்..?” என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்துக்களின் நியாயமான வழிபாட்டு உரிமைகளையும், ஆன்மிக விழாக்களையும் ஒடுக்குவதில் சட்டத்திற்கு புறம்பான அனைத்து வழிமுறைகளையும் தமிழக அரசு பின்பற்றி வருகிறது. திண்டுக்கல் ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தர்கள் குழு அறக்கட்டளை சார்பில் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சமுதாய இயக்கங்களும் ஒன்றிணைந்து வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி “அன்னை அபிராமி புகழ் ஓங்க… ஆன்மிக மாநாடு” நடத்த உள்ளனர்.

இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி. இராதாகிருஷ்ணன், மடாதிபதிகளும், துறவிகளும் ஆன்மிக உரை நிகழ்த்த இருக்கிறார். யாக வேள்விகளும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகளும் நடைபெற உள்ளது. இதற்காக திண்டுக்கல் நகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஆன்மீக மாநாடு சுவர் விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. இந்த சுவர் விளம்பரங்களை நேற்றிரவு யாருக்கும் தெரியாமல் காவல் துறையினர் வெள்ளை அடித்து அழித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் இந்தச் செயல் வெட்கக்கேடானது, அவமானகரமானது.

இந்துக்களின் சாதாரணமான அன்றாட நிகழ்வுகளைக் கூட காவல்துறையைக் கொண்டு தடுத்து நிறுத்துவதும் ஒடுக்குவதும் தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறி வருகிறது. மேலும் மேதகு ஆளுநர் மற்றும் துறவியர் பெருமக்களின் பெயர்களையும் அழித்து அரசு தனது வன்மத்தை கக்கி உள்ளது. இந்துக்கள் ஆன்மிக மாநாடு நடத்துவதில் இந்த அரசு என்ன குறை கண்டது. ஏன் இந்துக்களின் மீது இத்தனை வன்மம்..?

இந்துக்களுக்கு எதிரான அடக்கு முறையை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த இந்த இழி காரியத்தை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லை என்றால் திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சமுதாயத்தையும், அனைத்து பக்தி அமைப்புகளையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்வதோடு சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடாது என்பதையும் அறிவுறுத்துகிறோம்.

தமிழகத்தில் சாத்வீக முறையில் உருவாகின்ற இந்து எழுச்சியையும், இந்து ஒற்றுமையையும் யாராலும் தடுக்க முடியாது என்பதையும் இந்து முன்னணி இந்த அறிக்கையின் வாயிலாக அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *