`இந்த ஃபோட்டோஸ வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது; ஆனா ஒரு மனுசனா.!’ – நவீன்ராஜ் கவுதமன் அனுபவம்

Spread the love

நாம் இதுவரை பயணப்படாத காடுகளுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் ஊடுருவி, அங்கு வாழும் அசலான மனிதர்களின் வாழ்வை, கொண்டாட்டங்களை படம்பிடிக்கிறது ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமனின் கேமரா. கையில் கேமராவுடன் காடுமேடுகளில் அலையும் இந்தப்பயணத்தைப் பற்றி நம்மிடம் பகிரத் தொடங்குகிறார்.

நவீன்ராஜ் கவுதமன்

” நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் பக்கத்துல ஒட்டக்குடி கிராமம். இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வேலைப் பார்த்திட்டு இருந்தேன். அந்த வேலையை விட்டுட்டு இப்போ ஒரு 13 வருசமா தொடர்ந்து ஃபோட்டோகிராபி பண்ணிட்டு இருக்கேன். மனிதர்களையும் அவர்கள் சார்ந்திருக்கிற சூழல்களையும் படம் எடுக்கிறது புடிக்கும்.

கொரோனா நேரத்துல உண்டான மன உளைச்சலிருந்து மீள்றதுக்காக நிறைய புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பழங்குடிகள் பத்தின ஆவணப்படங்கள் எல்லாம் பார்க்கும் போது அவங்களோட வாழ்க்கை முறை எப்படி இருக்கும்ன்னு ஆர்வம் வந்து கிளம்புனது தான் இந்தப்பயணம்.

கொரோனா காலக்கட்டம் நம்ம வாழ்க்கை முறையில இருந்து ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது. ஆனா பழங்குடிகளோட வாழ்க்கைமுறை இயல்பாகவே அப்படிதான் இருந்தது அதைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமா இருந்தது.

இந்தப்பயணத்துல மூலமா பழங்குடிகளோட வாழ்க்கை முறை என்னவா இருக்கு. இயற்கையோட எந்த மாதிரி சார்ந்து வாழ்றாங்க.. எந்த மாதிரி கஷ்டப்படுறாங்கன்னு எல்லாத்தையும் என்னால புரிஞ்சிக்க முடிஞ்சிது. அவங்களோட கஷ்டக்காலங்களில் வாழ்க்கை நடத்தினாலும் அவங்க குடும்பத்திற்குள்ளயும் சுற்றி இருக்கிறவர்களையும் சார்ந்து வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமா கொண்டு போகுறாங்க. எப்போதுமே அவங்க வாழ்க்கை ‘ஒரு இசையோடும், நடனத்தோடும் எதாவது ஒரு கலைவடிவத்தோடும் கலந்ததாகத்தான் இருக்கும்’. அவங்களோட ஒவ்வொரு நாளையும் எப்படி கொண்டாட்டமா வாழ்றாங்க என்கிற வியப்பில இருந்து என்னால இன்னும் மீளமுடியல” என்கிறார்.

“பழங்குடிகள் சார்ந்த தகவலை எப்படி சேகரிக்கிறீங்க?”

” நம்ம எப்பயும் எந்தவொரு விஷயமும் தெரியாம அவங்க இப்படி இருக்காங்க, இப்படி இருக்காங்கன்னு எடுக்கக் கூடாதுன்றதுக்காக பழங்குடிகள் சார்ந்து இயங்கக்கூடிய ஆக்டிவிஸ்ட் கூட தொடர்ந்து உரையாட ஆரம்பிச்சேன். நிறைய டிராவல் பண்ணி அவர்கள் சார்ந்த புத்தகங்களும் அவங்க தொடர்பான தகவல்களும் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கப்பறம் தான் முதல்ல நம்ம அவர்களோட பண்டிகைகளையும் சடங்குகளையும் ஆவணப்படுத்தனும்ன்னு நினைச்சி தொடங்குனேன்.

பொதுவாகவே, ஃபோட்டோகிராபின்னு சொல்லிட்டு கேமரா தூக்கிட்டு போனாலே நிறைய இடத்துல பயப்பிடத்தான் செய்வாங்க. நம்ம போகிற இடத்துல யாராவது ஒருத்தர்கிட்ட நம்ம என்ன எடுக்குறோம், எதுக்காக எடுக்குறோம்ன்னு உட்கார்ந்து பேசும்போது அதைப் புரிஞ்சிக்கிறாங்க. நம்மள அவங்க நம்பணும் அவ்ளோ தான். உளுந்தூர்பேட்டை கிட்ட ஒரு பழங்குடிகள் இருக்கிறாங்க. கிட்டத்தட்ட ஏழுமுறைக்கு மேல அங்க போயிருக்கேன். எங்கிட்ட எப்போ போனாலும் நல்லா பேசுவாங்க ஆனா, இதுவரைக்கும் ஒரு ஃபோட்டோ கூட எடுக்க விட்டதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் அவங்க எடுக்கக்கூடாதுன்னு சொன்னா எடுக்கக்கூடாது தான். எடுக்க மாட்டேன். அவங்களோட உணர்வுகளை நம்ம மதிக்கணும். அவங்களை நம்ம தொந்தரவு பண்ணிடக்கூடாது. ”

இந்தப்பயணத்துல நீங்க கத்துக்கிட்ட விஷயம் ?

“அவங்க வாழ்க்கையில இருந்து நம்ம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. இந்த ஃபோட்டோஸ் வச்சி என்ன பண்ணப்போறேன்னு தெரியாது. ஆனா ஒரு மனுசனா அவங்களோட வாழ்க்கையில இருந்து நிறைய கத்துக்கணும்ன்னு நினைச்சேன்.

பெரும்பாலான பழங்குடிகள் காடுகள்ல தேன் எடுப்பாங்க. அப்படி அவங்க தேன் எடுக்கும் போது ஒரு தேனீக்கூட இறந்திடாம அதை முழுமையாகக்கூட எடுக்காம அவங்களுக்கு எவ்வளவு தேவையோ அதைமட்டும் தான் எடுப்பாங்க. அதைப்போல ஒருத்தங்க தேன் எடுக்கிறதுக்காக கல்லை அடையாளத்துக்கு வச்சிருந்தாங்கன்னா மற்றவங்க அதை எடுக்க மாட்டாங்க.

பேச்சிப்பாறை அணையில இருக்கிற காணிப்பழங்குடிகள் தான் விளைவிக்கிற பயிர்களில் விலங்குக்கும் சேர்த்து தான் விளைவிப்போன்னு சொன்னாங்க. அதைக்கேட்கவே ஆச்சரியமா இருந்தது. காட்டை சாராத செயற்கையான விஷயங்களை சேர்க்கும் போது அந்தக்காடும் எந்த மாதிரி செயற்கையா மாறுங்கிறதைப் பத்தி சொன்னாங்க. அவங்களுக்கு தான் இருக்கிற சூழல் சார்ந்த அறிவு, வாழ்க்கை முறை எல்லாமே நிறைய விஷயங்களை நமக்கு சொல்லிக்கொடுத்திட்டே இருக்கும்.

அவங்களோட வாழ்க்கை முறையே அளவுக்கு அதிகமாக சேர்த்து வைக்காம அவங்களுக்கு தேவையான பொருள்களை அவங்களை செய்துகிறாங்க, சமவெளியில் இருக்கிறவங்களை விட எல்லா விஷயங்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்குறாங்க. கல்யாண வாழ்க்கையில வரதட்சணை கிடையாது. ஒருத்தவங்களை பிடிச்சிருக்குன்னா அவங்களோட வாழ்றாங்க. பிடிக்கலன்னா பெரியவங்கட்ட சொல்லி விலகி இன்னொருத்தோட வாழ ஆரம்பிச்சிடுறாங்க. இயற்கையோடும் விலங்குகளோடும், பூச்சிகளோடும், மனிதர்களோடும் எவ்ளோ ஆத்மார்த்தமா நல்ல புரிதல்களோட வாழ்றாங்க. “

சுயம்புன்னு பெண்களையும் தனியா ஆவணப்படுத்துறீங்களாமே?

” ஆமா. நம்ம வாழ்க்கையோட அங்கமா இருக்கிற பெண்கள் கிட்ட பலதரப்பட்ட கதைகள் இருக்கும். சுயம்பா தன்னெழுச்சியாய் குடும்பத்தையும் சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய பெண்களை குறிப்பா அவங்களோட சிரிப்பை எடுக்கணும் ‘ சுயம்புங்கிற’ பெயர்ல பெண்களை சிறுவர்கள் ல இருந்து பெரியவர்கள் வரைக்கும் கிட்டத்தட்ட 500ற்கும் மேற்பட்ட பெண்களை எடுக்க ஆரம்பிச்சேன். அதுவும் அவங்க மனசுல இருந்து ஆத்மார்த்தமா சிரிக்கிறதை எடுத்தேன். அந்த பயணத்துல ரொம்ப சந்தோசமா இருந்தேன். அப்போ சந்திச்ச பெண்களோட கதைகள் ஒவ்வொன்னு என் வாழ்க்கையோட பல நேரங்கள்ல துணை நின்னுருக்கு.

பழங்குடிகள் நிறைய இடங்களில் இறப்பையே கொண்டாட்டமாத்தான் எடுத்துக்கிறாங்க. இன்னும் இன்னும் நிறைய மக்களை, அவங்க வாழ்வியலை தெரிஞ்சிக்கிறது தான் என்னோட முதன்மையான நோக்கமாகவே இருக்கு. சடங்கு மற்றும் பண்டிகைகள் நடக்குற நேரத்தில் தான் எல்லாரையும் சந்திக்க முடியுதுங்கிறதுனால அது சார்ந்து எடுத்துட்டு இருக்கேன்.

பழங்குடிகள் தங்களோட இருப்பிடத்தை விட்டு நகரும் போது அவங்களோட எல்லா விசயங்களும் மாறத்தொடங்கிவிடுகிறது. அவங்களுக்கான அடிப்படை பிரச்சனைகளையும் தொடர்ந்து ஆவணப்படுத்தனும்ன்னு ஆசை இருந்தாலும் எந்தவித புரிதலும் இல்லாம எடுக்கக்கூடாது. நமக்கு கிடைச்சிருக்கிற நேரத்தை வீணாக்கிடாம காலம் மாற மாற மாற்றங்களும் நடத்திட்டே இருக்கு. அதுக்குள்ள நம்மளும் பதிவு பண்ணி வச்சிக்குவோம்ன்னு தான் தொடர்ந்து செயல்பட்டுட்டு இருக்கேன். வாழ்க்கையை இன்னும் இன்னும் வாழனுங்கிற ஆசையை இந்தப்பயணங்கள் தான் எனக்கு கொடுக்குது.” என மனம் நெகிழ்கிறார் ஃபோட்டோகிராபர் நவீன்ராஜ் கவுதமன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *