“இந்த ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எதுவும் கிடைக்காததால்…” – இபிஎஸ்ஸுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் | Chief Minister Stalin response to Edappadi Palanisamy

1363194
Spread the love

சென்னை: “எடப்பாடி பழனிசாமிக்கு இந்த ஆட்சியை பற்றி குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. அதனால், திரும்ப திரும்ப அரைத்த மாவை அரைப்பது போல் இப்படி குறை கூறுகிறார். அதற்கு நான் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மே 27) கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 22.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மூன்று மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 4.36 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட ஜெனரல் குமாரமங்கலம் குளம் மற்றும் பூங்கா, 91.36 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தணிகாச்சலம் நகர் கால்வாய் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 150 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவ, மாணவியர்களுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் மடிக்கணினிகளையும், பயனாளிகளுக்கு கண்ணாடிகளையும் வழங்கினார்.

17483542333061

கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உங்களது டெல்லி பயணத்தை தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறாரே என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அவருக்கு இந்த ஆட்சியை பற்றி குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. அதனால், திரும்பத் திரும்ப அரைத்த மாவை அரைப்பது போல் இப்படி குறை கூறுகிறார். அதற்கு நான் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை” என்றார்.

டெல்லி பயணம் குறித்து எதிர்க்கட்சியின் விமர்சனங்கள் குறித்து உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்விக்கு, “நான் வெள்ளைக் கொடியை கொண்டு சென்றதாக கூறினார். நான் வெள்ளைக் கொடியோ, காவிக் கொடியோ கொண்டு செல்லவில்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். அதற்கு என்ன பதில் சொல்கிறார்?” என்று முதல்வர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அரக்கோணம் சம்பவத்தை சுட்டிக்காட்டி, இந்த ஆட்சி முடியும் வரை, மக்கள் அவர்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அதெல்லாம் கொள்ளை அடித்த ஆட்சி, ஏற்கெனவே சாத்தான்குளம், தூத்துக்குடி என பல்வேறு சம்பவங்கள் உள்ளன. அதெல்லாம் எடுத்துச் சொல்ல நேரம் போதாது. இவையெல்லாம் வீம்புக்காக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *