`இந்த ஒரு விஷயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது' – திமுக கூட்டணி இழுபறிக்கு தேமுதிக காரணமா?

Spread the love

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொடர்ந்து மறுத்து வருவதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க முடியாமல் தவிக்கிறது திராவிட முன்னேற்ற கழகம். தி.மு.க தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறிக்கான காரணங்களை அலசினோம்.

முதல்வரை சந்தித்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள்
முதல்வரை சந்தித்த திருமாவளவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள்

தி.மு.க கூட்டணியின் பிரதான கட்சிகளான காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ம.தி.மு.க-வுக்கு 4, சி.பி.ஐ-க்கு 5 என கூட்டணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன. ஆனால், வி.சி.க-வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகவில்லை என்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அறிவாலயப் புள்ளிகள், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 தொகுதிகளில் தொடங்கி கடந்தமுறை அவர்கள் பெற்ற 6 தொகுதிகள்வரை தருவதாக சொல்லிவிட்டோம். ஆனால் 6 தொகுதிகளுக்கு கூடுதலாக தொகுதிகள் தருவதாக இருந்தால்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் வி.சி.க-வுக்கு 7 தொகுதிகள் தர இசைவு தெரிவித்த நிலையில், அவர்கள் தமிழ்நாட்டில் 8 தொகுதிகளும் புதுச்சேரி மாநிலத்தில் 2 தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், சி.பி.எம்-க்கு 6, வி.சி.க 7 தொகுதிகள் என்பதுதான் எங்கள் கணக்கு” என்றனர்

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
பெ. சண்முகம்

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “தி.மு.க கூட்டணியில் நிகழும் நெருக்கடிகள் அனைத்துக்கும் தே.மு.தி.க-வின் வருகையே காரணம். தி.மு.க-வுடனான மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ‘புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினால் நீங்கள் எதிர்பார்க்கின்ற அளவுக்கு தொகுதிகள் தருவது கஷ்டம் என்று சொல்லியிருக்கிறார்கள், ஆனால் இதே சிரமத்திற்கு மத்தியில் தே.மு.தி.க-வுக்கு அதிக தொகுதிகள் கொடுக்கப்படும் என்று ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது’ என தங்கள் குமுறல்களை பதிவுசெய்தார் சண்முகம், இன்னும் பொதுவெளியில் பேசவில்லை என்றாலும் வி.சி.க-வும் இதே நினைப்பில்தான் இருக்கிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்டு 2,00,157 லட்சம் வாக்குகளைப் பெற்றது தே.மு.தி.க. வாக்கு வங்கியாகப் பார்த்தால் 0.4%-தான் வரும். எந்த ஒரு களச் செயல்பாடும் கொண்டிராத அந்தக் கட்சிக்கு 9 முதல் 10 தொகுதிகள் தர தயாராகியிருக்கும் தி.மு.க, வி.சி.க-வுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் தருவதில் என்ன சிக்கல்.. என்ற ஒற்றைக் கேள்விதான் தி.மு.க கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு காரணம்” என்றனர்.

திருமாவளவன் - பெ.சண்முகம்
திருமாவளவன் – பெ.சண்முகம்

நம்மிடம் பேசிய வி.சி.க முன்னணி நிர்வாகிகள், “தே.மு.தி.க-வுக்கு அதிகமாகக் கொடுத்து, வி.சி.க., கம்யூனிஸ்ட்டுகளுக்கு தொகுதிகளை குறைத்துக் கொடுக்க முன்வந்தால் கூட்டணிக்குள் வருத்தம் உண்டாவதைத் தவிர்க்க முடியாது. அண்மையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா அவர்களும், `திமுக எங்களிடம் தொகுதிகளை குறைக்க சொல்ல கேட்கவில்லை’ என்று பேசினார்.

எண்ணிக்கைக்காக எங்கள் கூட்டணி உடையாது என்றாலும் தொண்டர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவதில் எக்கச்சக்க பிரச்னைகள் வரும். அதிலும் தே.மு.தி.க கூட்டணியை உறுதி செய்தவற்கு முன்பு எங்களிடம் கையெழுத்து வாங்குவதில் தி.மு.க குறியாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஆகையால் முதலில் தே.மு.தி.க கையெழுத்துப் போடட்டும் என எங்களை தலைமையிடம் சொல்லியிருக்கிறோம்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *