இந்த ஆபத்தான போக்கு குறித்து பேசும் அனுபவமிக்க மருந்தாளரான ஸ்டீவ் ஹாஃபர்ட், பொதுவாக எடுத்துக் கொள்ளப்படும் மூன்று மருந்துகளைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசியுள்ளார் மற்றும் அவற்றைத் தனிப்பட்ட முறையில் தவிர்க்கவும் வலியுறுத்துகிறார். இவை உடல்நலத்திற்கு நேர்மறையான பயன்களை தந்தாலும், அதன் நீண்டகால பயன்பாடு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் விளக்கினார்.
NSAID-கள் எனப்படும் ஸ்டெராய்டல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID) வலி மற்றும் வீக்கத்தை குறைக்க மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை விரைவான நிவாரணத்தை வழங்கினாலும், அதன் நீண்டகால பயன்பாடு குடல் புண்கள், இரத்தப்போக்கு, சிறுநீரக சேதம், மூட்டு பாதிப்பு போன்ற சீரற்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. இதனால், நீண்ட காலத்திற்கு NSAID களை நம்புவதற்குப் பதிலாக, உணவு மாற்றங்கள், ஒமேகா-3 சப்ளிமெண்ட்கள் அல்லது குர்குமின், மெக்னீசியம் போன்ற இயற்கை சேர்மங்கள் மூலம் வீக்கத்தை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள் (PPI) பெரும்பாலும் அமில ரிப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் குறைபாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இவை, வயிற்றில் அமிலத்தை குறைத்து சம்பந்தப்பட்ட அறிகுறிகளை சரிசெய்கின்றன. ஆனால், இதன் நீண்டகால பயன்பாடு உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களான பி12, இரும்பு, மெக்னீசியம் போன்றவற்றை உறிஞ்சுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
இதனால் எலும்பு பலவீனம், இரத்த சோகை, ஆஸ்டியோபரோசிஸ் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். சில ஆய்வுகள் PPI களை நீண்டகாலம் பயன்படுத்தும் போது நினைவாற்றல் குறைவு மற்றும் தொற்று அபாயங்களும் அதிகரிக்கலாம் எனக் காட்டுகின்றன. எனவே, நெஞ்செரிச்சல் பிரச்சினைக்கு முழுமையாக PPI களை பயன்படுத்தாமல், உணவு முறையில் மாற்றங்களை கொண்டு வருதல் மற்றும் புரோபயாடிக்குகள் போன்ற இயற்கையானவற்றை பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்.
கொலஸ்ட்ராலை குறைக்க அதிகம் பரிந்துரைக்கப்படும் ஸ்டேடின்கள், நீண்டகாலம் கோஎன்சைம் க்யூ10 (CoQ10) மற்றும் வைட்டமின் டி அளவைக் குறைக்கும். இதனால் தசை வலி, ஆற்றல் குறைவு, ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம். மேலும், இதனை நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் போது, டைப் 2 நீரிழிவு, நினைவாற்றல் குறைவு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்ற சாத்தியமான சிக்கல்களும் ஏற்படுகின்றன.
எனவே, கொழுப்பை குறைக்க மருந்துகளை முயற்சிப்பதற்கு பதிலாக, வாழ்கைமுறை மாற்றங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவு, வழக்கமான உடற்பயிற்சி, மன அழுத்த மேலாண்மை, தரமான தூக்கம் மற்றும் ஒமேகா-3 போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான தேர்வுகளை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு
இந்த மூன்று மருந்துகளையும் முழுமையாகத் தவிர்க்க வேண்டியதில்லை, அவசர காலங்களில் அவற்றால் பயன் பெற முடியும். ஆனால், நீண்டகாலமாக அவற்றை பொறுப்பின்றி எடுத்துக் கொள்வது உடலுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். வலி, அமிலத்தன்மை அல்லது கொழுப்பு சமநிலை போன்ற அடிப்படை காரணங்களை அடையாளம் காண்பது பாதுகாப்பான மற்றும் நீடித்த தீர்வுக்கு வழிவகுக்கும்.
மறுப்பு: இந்த கட்டுரை மருத்துவ தகவல் நோக்கத்திற்காக மட்டுமே, மருந்துகளை மாற்றவதற்கு அல்லது நிறுத்தவதற்கு முன்பாக தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.
October 16, 2025 4:03 PM IST