சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்கள் தற்போது வரை ரூ.115 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகம் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை இணையம் மூலமாக, சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபபொருட்களை தயாரித்து, நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு, பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் மற்றும் கார வகைகள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலங்களை அணுகி அவர்களுக்கு தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது, வரை ரூ.115 கோடி இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைரூ.10 கோடி அதிகமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.