அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானில் நடத்தி வரும் போர் மூன்றாவது வாரத்திற்கு வந்திருக்கிறது. இத்தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த அமெரிக்கா 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களை கப்பல்களில் அனுப்பி இருக்கிறது.
ஏற்கனவே வளைகுடாவில் 50 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். புதிதாக வரும் கப்பல் மத்திய கிழக்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இத்தாக்குதலை ஆரம்பத்தில் இருந்தே முன்னெடுத்தது இஸ்ரேல்தான். எனவேதான் இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்போது ஈரான் தங்களது பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதால் அந்த வழியாக வர்த்தக கப்பல்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்லும் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்திக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க நேட்டோ நாடுகளிடம் போர்க்கப்பல்களை அனுப்பும்படி அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் எந்த நாடும் போர்க்கப்பலை அனுப்ப மறுத்திவிட்டது.

இதனால் நேட்டோ அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே இந்த போர் அமெரிக்காவிற்கு தேவையில்லாதது என்று அமெரிக்க மக்கள் நம்புகின்றனர். இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மற்றொரு புறம் போரை முன்னெடுத்துச் செல்ல அமெரிக்காவிற்கு கடுமையான பொருட்செலவாகிறது. இதையடுத்து போரை முடிவுக்கு கொண்டு வர டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகிறது.
இது தொடர்பாக அவர் தற்போது தனது சமூக தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய நெருங்கிவிட்டதாகவும், இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிரான ராணுவ முயற்சிகள் அதன் நோக்கத்தை எட்டிவிட்டன. ஈரானின் ஏவுகணைத் திறன், ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில் கட்டமைப்புகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. ஈரானின் கடற்படை மற்றும் வான்படை அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஈரான் ஒருபோதும் அணுஆயுதத்தைப் பெறாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நட்பு நாடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், “மறுபுறம் இருப்பவர்களை நாம் முழுமையாக அழித்துக் கொண்டிருக்கும்போது போர்நிறுத்தம் செய்ய முடியாது” என்று கூறி, உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்த அவர் மறுத்துவிட்டார்.
ஹார்முஸை கைவிட்ட ட்ரம்ப்
ஹார்முஸ் நீரிணை தொடர்பான தனது செய்தியில், `அந்தப் பாதையைச் சார்ந்துள்ள நாடுகள் அதன் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் மற்ற நாடுகள், தேவைக்கேற்ப அதன் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அமெரிக்கா இனி அதைச் செய்யாது. அமெரிக்கா இதற்கு உதவ முடியும் என்றாலும், அது அவசியமற்றது. உதவி கேட்கப்பட்டால், ஹார்முஸ் தொடர்பான முயற்சிகளில் அந்த நாடுகளுக்கு நாங்கள் உதவுவோம். ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக அழிக்கப்பட்ட பிறகு அது தேவையாக இருக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பணி எளிதானது என்று விவரித்த ட்ரம்ப், அந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பாதுகாப்பது, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒரு எளிதான ராணுவ நடவடிக்கையாக இருக்கும் என்றும் கூறினார்.
ட்ரம்பின் இந்த கருத்துகள், மத்திய கிழக்கில் பதற்றங்கள் இன்னும் தணியாத நிலையிலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சூழலிலும், மூன்று வாரங்களாகத் தீவிரமாக நடத்தி வந்த தனது நேரடி ராணுவ தாக்குதலை அமெரிக்கா குறைக்கத் தயாராகி வருவதைக் காட்டுகின்றன. இது அமெரிக்காவின் உத்திகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டுகிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.