குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, இன்றும் நடித்து வருபவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. இவரின் தந்தை சில தினங்களுக்கு முன் வயோதிகம் காரணமாக காலமானார்.
இந்த நிலையில் அது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவரிடம் விசாரித்திருக்கிறார். ரொம்பவே நெகிழ்ச்சியுடன் அதை விவரித்தார் ஆர்த்தி.
“‘எங்க குடும்பம் பக்கா திமுக குடும்பம். நானும் சின்ன வயசுல இருந்தே திமுக மேடைகள்ல ஏறியிருக்கேன். எனக்கும் கணேஷ்க்கும் கல்யாணத்தை நடத்தி வச்சதே கலைஞர் அய்யாதான். கோபாலபுரத்துல கலைஞர் அய்யா மட்டுமில்லாம ஸ்டாலின், செல்வி அக்கா எல்லார் கூடவும் நல்ல தொடர்பு இருந்திச்சு.
இந்தச் சூழல்ல ஒரு தேர்தலையொட்டி திடீர்னு ஒருநாள் மறைந்த ஜெயலலிதாம்மா கிட்ட இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் வீட்டுல யாருக்குமே அங்க போக பிடிக்கலை. ஆனா தனிப்பட்ட முறையில எனக்கு அம்மாவை ரொம்பவே பிடிக்கும். அதுவும் போக அவரே விரும்பி கூப்பிடறப்ப போகாம இருந்தா எப்படினு போனேன்.
அங்க போனதும் குடும்பம் வேலை பத்தில்லாம் விசாரிச்சுட்டு, இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிடுறேன்னு சொல்லி பிரச்சாரத்துக்குப் போகச் சொல்லிட்டாங்க.
நான் திமுக-வுக்காக பேசறது தெரிஞ்சும் அவங்க கூப்பிட்டதால என்னால மறுக்க முடியலை. அதனால அப்ப இருந்து அம்மா இருந்த வரைக்கும் ஒவ்வொரு தேர்தல்லயும் அதிமுக-வுக்காக பிரச்சாரம் செய்தேன்.
அவர் மறைஞ்ச பிறகு எனக்கு வேற கட்சிக்குப் போகப் பிடிக்காததால் இப்ப எந்தக் கட்சியிலயும் சேராம சிவனேன்னு இருக்கேன்.