பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக உருவாகி வரும் ‘சூப்பர் எல் நினோ’, இந்த நூற்றாண்டின் மிக வலிமையான இயற்கை நிகழ்வாக மாறக்கூடும் என சர்வதேச வானிலை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு நீர் வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடைவதையே ‘எல் நினோ’ என்கிறோம். இது 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இயற்கையான மாற்றமாகும். இது உலகளாவிய மழைப்பொழிவு, புயல்கள் மற்றும் வெப்பநிலையைப் பெருமளவில் மாற்றியமைக்கும் திறன் கொண்டது.
கடல் வெப்பநிலை 0.5°C உயர்ந்தால் ‘எல் நினோ’ தொடங்குவதாக அறிவிக்கப்படும். வெப்பநிலை உயர்வு 1.5°C-ஐத் தாண்டினால், அதை ‘சூப்பர் எல் நினோ (Super El Niño)’ என்கிறார்கள்.

இது வெறும் தற்காலிக வெப்ப உயர்வு மட்டுமல்ல, பூமியின் சுற்றுச்சூழல் மண்டலத்தையே நிலைகுலையச் செய்யும் ஒரு ‘காலநிலை மாற்றத் தொடக்கம்’ எனப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் NOAA மற்றும் ஐரோப்பாவின் ECMWF அமைப்புகள் ஏப்ரல் 6-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றன. அதன்படி ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் எல் நினோ உருவாக 62% வாய்ப்பு உள்ளது. ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதங்களில் இது 80% ஆக அதிகரிக்கும். கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட 2.0°C-க்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பரில் ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ (Nature Communications) இதழில் வெளியான ஆய்வறிக்கை ஒரு அதிர்ச்சியான தகவலை முன்வைக்கிறது. சாதாரண எல் நினோ நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சரியாகிவிடும். ஆனால், ‘சூப்பர் எல் நினோ’ நிகழ்வுகள் பூமியின் காலநிலையை ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குத் தலைகீழாக மாற்றிவிடும். உதாரணமாக, மத்திய தெற்காசியா (இந்தியா உட்பட), கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அமேசான் காடுகளில் மண் ஈரப்பதம் குறைந்து நிரந்தர வறட்சி ஏற்படலாம். இத்தகைய திடீர் மாற்றங்கள் விவசாயத்தை அடியோடு பாதிக்கும்.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை, எல் நினோ இரண்டு பெரிய மாற்றங்களை உண்டாக்கும். ஜூன் – செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவமழை இயல்பை விடக் குறையக்கூடும், இது வறட்சிக்கு வழிவகுக்கும். அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விடக் கூடுதலாகப் பெய்து பெருவெள்ளத்தை உருவாக்கலாம்.
கடந்த 100 ஆண்டுகளில் 1982-83, 1997-98 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே சூப்பர் எல் நினோ நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. 2015-16 நிகழ்வின் போது தான் உலக அளவில் வெப்பம் கடுமையாக அதிகரித்து, கடலில் உள்ள பவளப்பாறைகள் (Coral Reefs) பெருமளவில் அழிந்தன.
இந்த சூப்பர் எல் நினோ குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும், இதை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்தும் விரிவாகப் பேச பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றிச் செல்வனைத் தொடர்புகொண்டோம். அவர், இது குறித்து விளக்கமாகப் பேசத் தொடங்கினார்.
“புவியின் வெவ்வேறு பிராந்தியங்களில் நிலவும் காற்றுச் சுழற்சி மண்டலங்களுக்கு (Atmospheric Circulation) வெவ்வேறு பெயர்கள் உண்டு. உதாரணமாக, இந்தியப் பெருங்கடலில் ஏற்படுவதை ‘இந்தியா டைபோல் எபெக்ட்’ (IOD) என்றும், மற்றொன்றை ‘எம்ஜேஓ’ (MJO) என்றும் அழைக்கிறோம். பசிபிக் கடலில் நிலவும் சுழற்சியில், குளிர்ந்த காற்று வீசும் நிலையை ‘லானினா’ (La Niña) என்றும், வெப்பக் காற்று வீசும் நிலையை ‘எல் நினோ’ (El Niño) என்றும் அழைக்கிறோம்.
கடந்த ஆண்டு லானினா நிலையில் இருந்த பசிபிக் கடல், தற்போது எல் நினோ நிலைக்கு மாறி வருகிறது. இந்த மாற்றம் மிகத் தீவிரமாக இருப்பதால், இது ‘சூப்பர் எல் நினோ’ என்று அழைக்கப்படுகிறது.
இயற்கையாகவே நடக்கும் இந்த மாற்றங்களை புவி வெப்பமடைதல் இன்னும் மோசமாக்குகிறது. கடல் நீரோட்டம் மற்றும் காற்றுச் சுழற்சியில் குளோபல் வார்மிங் ஏற்படுத்தும் குறுக்கீடுகளால், இந்த முறை வெப்பத்தின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவில் இருக்கும். குறிப்பாக, மத்திய தரைக்கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்தியா மற்றும் அதன் தென் மாநிலமான தமிழ்நாடு ஆகியவை மிகக் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
உண்மையில், கடந்த பத்து ஆண்டுகளாகவே தமிழகத்தில் ஒரு விசித்திரமான சூழலை நாம் கவனித்து வருகிறோம். ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் வெயில் மட்டுமே நிலவும் ஒரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகள் வரலாற்றிலேயே மிக அதிக வெப்பம் பதிவான வருடங்களாக மாறியுள்ளன. வழக்கமாக மே மாதத்தில்தான் வெயில் உச்சமடையும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே வெப்பத்தின் அளவு நம்மை நிலைகுலையச் செய்துவிட்டது.

வரும் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இது இன்னும் ஒரு புதிய உச்சத்தைத் தொடும் என அஞ்சப்படுகிறது. மரங்கள் வெட்டப்பட்டு, கான்கிரீட் கட்டடங்கள் அதிகரித்துள்ளதால், வெப்பத்தைத் தேக்கி வைக்கும் தன்மை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் நடக்கும்போதே மயங்கி விழும் (Heat Stroke) சம்பவங்கள் தற்போதே தொடங்கி, அதிகரித்து வருகிறது. சூப்பர் எல் நினோ பருவமழைப் பொழிவைக் குறைத்து, கடுமையான வறட்சியை உண்டாக்கக்கூடும். இது விவசாயத்தைப் பெருமளவில் பாதிக்கும். நீர்நிலை மேலாண்மை மற்றும் வறட்சியைத் தாங்கும் பயிர் சாகுபடிக்கு மாற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பின்பற்றும் பழைய முறைகளின்படி, 48 மணிநேரத்திற்கு சராசரி வெப்பத்தை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தால் மட்டுமே ‘வெப்ப அலை’ (Heat Wave) என அறிவிக்கப்படுகிறது. ஆனால், இன்றைய சூழலில் 2 மணிநேரம் வெயிலில் நின்றாலே மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் UTCI (Universal Thermal Climate Index) முறையை நாம் பின்பற்ற வேண்டும். இதில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் மட்டுமின்றி, கதிர்வீச்சு அளவு மற்றும் காற்றோட்டம் ஆகியவற்றையும் கணக்கில் கொள்வார்கள்.

ஈரப்பதம் அதிகமாக இருந்தால் வேர்வை வெளியேறாது, இதனால் உடல் தன்னைத் தானே குளிர்வித்துக்கொள்ளும் மெக்கானிசம் செயலிழந்து மனிதர்கள் இறக்க நேரிடும்.
தற்போது ஏற்படும் இந்த வெப்ப அலையிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக அரசும், தனி மனிதர்களும் சிலவற்றை முன்னெடுக்க வேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை கட்டுமானத் தொழிலாளர்கள், செங்கல் சூளை மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வேலை செய்வதைத் தவிர்க்க அரசு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். வெயிலினால் ஏற்படும் உயிரிழப்புகளைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். ‘வெப்பத்தினால் ஏற்பட்ட இதய பாதிப்பு’ (Heat-induced cardiac arrest) போன்ற தரவுகள் நம்மிடம் இல்லை. இதற்கு முறையான மருத்துவ வழிகாட்டுதல்கள் (SOP) தேவை.
ஒரு மாநிலத்தின் 33% நிலப்பரப்பு காடாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 21% மட்டுமே உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் காடு நிலப்பரப்பு குறைவு. சென்னையைப் பொறுத்தவரை வெறும் 3% தான் பசுமைப் பரப்பு உள்ளது. இதை உடனடியாக அதிகரிக்க வேண்டும்.

கட்டடங்களுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் மூலம் வெப்பத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குத் தள்ள முடியும். தனிமனித அளவில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, கூடுமானவரை தான் வசிக்கும் இடத்தைப் பசுமையாக வைத்துக்கொள்வது உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சூப்பர் எல் நினோ என்பது ஒரு எச்சரிக்கை மணி. இதை எதிர்கொள்ள நாம் அறிவியல் ரீதியாகத் தயாராக வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.