`இன்டர்னல் மார்க்கில் கைவைப்பேன்!’ – மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவக் கல்லூரி அலுவலர் தலைமறைவு

Spread the love

தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்தான் மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தில் முக்கிய பதவியிலிருக்கும் ராமமூர்த்தி என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக மாணவி தரப்பில் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து மாணவி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மருத்துவ கலந்தாய்வில் இந்தக் கல்லூரியில் பல் மருத்துவத்தை மாணவி தேர்வு செய்தார். விடுதியில் தங்கியிருந்து படித்து வரும் மாணவிக்கு கல்வி உதவி தொகை வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவி, தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் 18.12.2025-ம் தேதி இரவு விடுதியின் வார்டன் ஜான்சி என்பவர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் ராமமூர்த்தியை சந்திக்கும்படி மாணவியின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதன்படி 19-ம் தேதி காலையில் மாணவியும், நிர்வாக அலுவலர் ராமமூர்த்தியை சந்தித்து பேசியிருக்கிறார்.

டார்ச்சர்

டார்ச்சர்
சித்திரிப்புப் படம்

அப்போது, கல்லூரியில் சிசிடிவி இல்லாத பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்ற ராமமூர்த்தி, மாணவியின் வயதைக் கேட்டிருக்கிறார். பின்னர் மாணவியை ஆபாசமாக பார்த்ததோடு தன்னுடன் ரிலேசன்ஷிப்பில் இருந்தால் பெர்சனலாக உதவி செய்வதாக மாணவியிடம் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு மாணவி அதிர்ச்சியடைந்ததோடு அதற்கு மறுப்பும் தெரிவித்திருக்கிறார். உடனே `உன்னுடைய மதிப்பெண்ணை (internal mark) குறைத்துவிடுவேன்” என்று ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். இதையடுத்து ராமமூர்த்தி பேசியதை எங்களிடம் மாணவி தெரிவித்தார். உடனே கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தோம். உடனே மாணவியின் செல்போனை வாங்கிய வார்டன் ஜான்சி, தான் அனுப்பிய மெசேஜ்களை அழித்திருக்கிறார். அதோடு வெள்ளைத் தாளில் கையெழுத்தும் வாங்கியிருக்கிறார். இந்தத் தகவலை மாணவி, தன்னுடைய குடும்பத்தினரிடம் கூற, அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அங்கு எந்தவித பதிலும் சொல்லாததால் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறோம்” என்றனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீஸாரிடம் கேட்டதற்கு, “மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மாணவி குற்றம்சாட்டும் வார்டன் ஜான்சி, நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *