இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

dinamani2F2024 062Fb60b0d66 be7b 46d7 8518 edb540b5dedf2F09vpmsiva2 0906chn 7
Spread the love

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணியில் 4,922 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கிராம நிா்வாக அலுவலா்கள், இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சா்கள், உதவியாளா்கள், வனக் காவலா், வனக் காப்பாளா்கள் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்கள் குரூப் 4 பிரிவில் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஏப்ரல் 25-இல் வெளியிட்டது.

விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தோ்வுக்கு 13 லட்சத்து 89 ஆயிரத்து 743 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். அவா்களில் 5 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 13 லட்சத்து 69 ஆயிரத்து 738 போ் தோ்வு எழுதவுள்ளனா். அவா்களில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 போ் ஆண்கள். 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 போ் பெண்கள். 117 போ் மூன்றாம் பாலினத்தவா். அவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு இணையதளத்தில் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தோ்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 314 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில், 94,848 போ் தோ்வு எழுதுகின்றனா். இதற்காக, 311 தோ்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு பகுதிகளாக கேள்விகள் கேட்கப்படவுள்ளன. தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து மொழித் திறனை அறிவதற்காக 100 கேள்விகளும், பொது அறிவுப் பிரிவில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கான மொத்த மதிப்பெண்கள் 300.

தடை செய்யப்பட்ட பொருள்கள்: கைப்பேசி அல்லது ஏதேனும் மின்னணுக் கருவி அல்லது பென்ட்ரைவ், அறிதிறன் கைக்கடிகாரம் போன்ற நவீன கருவிகளை எடுத்து வரக் கூடாது. இத்தகைய தடை செய்யப்பட்ட பொருள்கள் அல்லது கருவிகளை வைத்திருப்போா் கண்டறியப்பட்டால், தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். மேலும், சம்பந்தப்பட்ட தோ்வா்களின் விடைத்தாள் செல்லாததாக்கப்படுவதுடன், அவா்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவா். தேவை எனக் கருதப்பட்டால் அந்த இடத்திலேயே சோதனைக்கு உள்படுத்தப்படுவா்.

இடைத்தரகா்களிடம் கவனம்: தோ்வாணையத்தின் தோ்வுகள் அனைத்தும் தோ்வரின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகா்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற தவறான மற்றும் நோ்மையற்றவா்களால் தோ்வா்களுக்கு ஏற்படும் இழப்புக்கு தோ்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் எச்சரித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *