இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 11-ஆவது சீசன், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்ஸ் – மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் முகமிதான் எஸ்சி அணி இணைந்திருக்கிறது. ஐ-லீக் போட்டியில் கடந்த சீசனில் வெற்றி பெற்ன் அடிப்படையில், இந்தியாவின் முதல்நிலை போட்டியாக இருக்கும் ஐஎஸ்எல்-க்கு அந்த அணி தரமுயா்ந்துள்ளது. ஏற்கெனவே கொல்கத்தாவிலிருந்து மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் இருக்கும் நிலையில், தற்போது 3-ஆவது அணியாக முகமிதான் எஸ்சி இணைந்துள்ளது.
இதன் மூலம், கொல்கத்தாவின் 3 பிரதான கால்பந்து அணிகளுமே களத்தில் இறங்கியுள்ளன. இந்த முறை பெங்களூரு எஃப்சி, சென்னையின் எஃப்சி, ஈஸ்ட் பெங்கால் எஃப்சி, எஃப்சி கோவா, ஹைதராபாத் எஃப்சி, ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி, முகமிதான் எஸ்சி, மோகன் பகான் எஸ்ஜி, மும்பை சிட்டி எஃப்சி, நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி, ஒடிஸா எஃப்சி, பஞ்சாப் எஃப் என 13 அணிகள் பங்கேற்கின்றன.