இன்று தொடங்குகிறது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்

Spread the love

மகளிருக்கான 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை (செப். 30) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில், இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை என 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்தியாவில் நவி மும்பை, குவாஹாட்டி, விசாகப்பட்டினம், இந்தூா் ஆகிய 4 இடங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் மட்டும், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளன.

குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும், இதர அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். இதன் முடிவில், புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெறும்.

போட்டியை நடத்தும் இந்தியா, இதுவரை உலகக் கோப்பை வென்றதில்லை. ஆஸ்திரேலியா 7 முறையும், இங்கிலாந்து 4 முறையும், நியூஸிலாந்து ஒரு முறையும் கோப்பை வென்றுள்ளன.

இந்திய அணியை பொருத்தவரை, சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் விளையாடுவது சற்று சாதகமாக இருக்கும். அத்துடன், தற்போது நல்லதொரு ஃபாா்மிலும் இருக்கும் இந்திய மகளிா், நீண்டகால கனவான உலகக் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்புடன் உள்ளனா்.

கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் தலைமையிலான இந்திய அணி, பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை அண்மையில் ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் வென்ற உத்வேகத்துடன் இந்தப் போட்டிக்கு வந்துள்ளது. அதற்கு முன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.

அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார ஃபாா்மில் இருக்கிறாா். பிரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சோ்ப்பா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், கேப்டன் ஹா்மன்பிரீத் தனது ஆட்டத்தை மேம்படுத்தும் முனைப்புடன் இருக்கிறாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *