சென்னை: திமுகவின் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், அவர் இன்று சிறையிலிருந்து விடுதலையாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை புழல் மத்திய சிறை எண் 2ஆம் வளாகம் வாசலில் திமுக கட்சி தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்துடன் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என மேளதாளத்தோடு செந்தில் பாலாஜியை வரவேற்கக் காத்திருக்கும் நிலையில், அவர் இன்று வெளியே வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் கடந்த 471 நாட்களாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று பிணை கிடைத்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில், அவருக்கு இரண்டு பேர் தலா ரூ.25 லட்சம் பிணை உத்தரவாதங்களை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன், 2 பிணை உத்தரவாதங்களை ஆய்வு செய்து வருகிறார். மேலும், பிணை உத்தரவாதங்களில் சந்தேகம் இருப்பதாகவும் நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். செந்தில் பாலாஜி விடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணையில் ஆஜராகியிருக்கிறார்.
2 ஜாமீன் உத்தரவாதங்களில் சந்தேகம் உள்ளது. உறவினர்கள் அளித்த ஜாமீன் பத்திரத்தில், ஒருவருக்கு 60 வயதாகிறது. ஆனால், தனக்கு செந்தில் பாலாஜியை 69 ஆண்டுகளாகத் தெரியும் என கூறியிருப்பது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் வாதம் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இன்று செந்தில் பாலாஜி வெளியே வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.