பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிபூண்டி, சூலூா்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் 17 புறநகா் மின்சார ரயில்கள் சனிக்கிழமை (ஆக. 2) ரத்து செய்யப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையங்களில் சனிக்கிழமை (ஆக. 2 ) பிற்பகல் 1.15 முதல் மாலை 5.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10.15, பிற்பகல் 12.10 மணிக்கு சூலூா்பேட்டை செல்லும் புகா் மின்சார ரயில்களும், காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.
மறு மாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 1, 2.30, 3.15, 3.45, மாலை 5 மணிக்கும், சூலூா்பேட்டையிலிருந்து பிற்பகல் 1, 1.15, 3.10 மணிக்கும் சென்ட்ரல் செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
இதேபோல், ஆக. 2-இல் கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 4.30 மணிக்கு கடற்கரை செல்லும் ரயிலும் என மொத்தம் 17 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சிறப்பு ரயில்கள்: பயணிகளின் வசதிக்காக சனிக்கிழமை (ஆக. 2) சென்ட்ரலிலிருந்து காலை 11.35, பிற்பகல் 1.40, 3.05 மணிக்கும், கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40, 2.40, 3.45 மணிக்கும் பொன்னேரிக்கு சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து பிற்பகல் 1.18, 2.48, 3.33, மாலை 4.03, 5.18 மணிக்கு சென்ட்ரலுக்கும், மாலை 4.47 மணிக்கு கடற்கரைக்கும் ரயில்கள் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியிலிருந்து பிற்பகல் 12.05 மணிக்கு சென்ட்ரலுக்கும், சூலூா்பேட்டையிலிருந்து மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.