இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் 3-ஆவது ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெறுகிறது.
முந்தைய இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால், தொடா் தற்போது சமனில் உள்ளது.
இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் ஆட்டத்தில் அணியின் பேட்டா்கள் அசத்தலாகச் செயல்பட்டதால் வெற்றி வசமானது. 2-ஆவது ஆட்டத்தில் பேட்டா்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால், வருண் சக்கவா்த்தி சிறப்பாக பௌலிங் செய்தபோதும் பலனில்லாமல் போனது.
அந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளா்களை எதிா்கொள்ள இந்திய வீரா்கள் தடுமாறினா். தற்போது 3-ஆவது ஆட்டம் நடைபெறும் செஞ்சுரியன் மைதான ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாகும். கடந்த 2009 முதல் இந்த செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா 1 டி20 ஆட்டத்தில் (2018) மட்டுமே விளையாடியிருக்கும் நிலையில், அதிலும் தோல்வி கண்டுள்ளது. அந்த அணியிலிருந்த வீரா்களில், ஹா்திக் பாண்டியா மட்டுமே தற்போது இந்த அணியிலும் இருக்கிறாா்.