`இன்றைக்கு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது..!’ – சமூக மாற்றத்திற்காகச் சுழலும் காந்தியவாதி ரமேஷ்! | An inspiring interview with Ramesh, a “Gandhite” social activist fighting for social change

Spread the love

நாமக்கல் மேற்கு பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், காந்திய வழியில் பொதுமக்களுக்கு அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தொடர்ந்து இயங்கி வரும் ரமேஷைச் சந்தித்து, உரையாடத் தொடங்கினோம்.

“எனக்கு சிறு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம். தினந்தோறும் சமூகத்தில் நடப்பதைப் பார்க்கும்போது, எனக்குள் ஆத்திரம்தான் எழுந்தது. பக்தியைக் காட்டிலும் அறிவியல்தான் அவசியம் என்பதை உணர்ந்ததால், நடைமுறை வாழ்வில் காந்திய வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பொதுமக்களிடையே பட்டா, உதவித் தொகை, அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைய வேண்டிய அவசியம் குறித்தும், அரசின் சேவைகளை பொதுமக்கள் எவ்வாறு நேர்மையான முறையில் பெற வேண்டும் என்பது பற்றியும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.”

அஹிம்சா வழியைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?

“காந்தியத்தை இந்திய நாட்டிற்குப் பிரதிபலிக்க வேண்டும், இளைஞர்களிடம் அஹிம்சை உணர்வைப் பரப்ப வேண்டும் என்பதற்காக உடை மாற்றத்திலிருந்து, காந்திய வழியைப் பின்பற்றி வருகிறேன். 2019 வரை சாதாரண கதர் உடையை அணிந்து வந்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் காந்தியைப் போன்று உடை அணிந்து வேட்புமனு தாக்கல் செய்தேன். தொடக்கத்தில் எனது குடும்பமும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் இது எத்தனை நாள்களுக்கு என்று கேட்டார்கள்? ஆனால் எனது வைராக்கியம், இன்றுவரை நான் இந்த உடையிலேயே எனது பாதையில் பயணித்து வருகிறேன். 2016 ஆம் ஆண்டு `அஹிம்சா சோஷியலிஸ்ட்” கட்சியைத் தொடங்கினேன். மற்ற கட்சிகள் பெயரளவிற்கு மட்டுமே அஹிம்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அஹிம்சை என்ற இலக்கை மையமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கு அரசியல் ‘சேவை என்பதைத் தாண்டி, வியாபாரமாக’ மாறிவிட்டது. எளிய பின்னணியில் இருந்து சமூகத்திற்காக தன்னலமற்று உழைக்கக்கூடிய நபர்கள்தான் அரசியலுக்கு வர வேண்டும். தேர்தல் நேரத்தில் வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி தேர்தலில் ஒரு தத்துவத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இதுவரை ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையாகக் கட்டி இருக்கிறேன். இதுவரையில் எந்த தேர்தலிலும் நான் செலுத்திய வைப்புத் தொகை திரும்பக் கிடைத்ததில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படுவதும் கிடையாது. பல கோடிகள் புழங்கும் இந்த அரசியலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் இந்த சமூகத்தில் பிறந்து விட்டோம், இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும். எனது இந்தப் பயணத்தில் மக்களிடையே சற்று விழிப்புணர்வு வந்துள்ளது. அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுப்பதும் அவர்கள் லஞ்சம் கேட்டால் எதிர்க்கும் நிலையும் பாமர மக்களிடையே வந்து இருக்கிறது.

தேர்தல் பரப்புரையில், `நீங்க என்ன ஜெயிச்சிடுவிங்களா?’ என்று மக்களே கேட்பார்கள். `நீங்கள் தனியாக ஓட்டு கேட்கிறீர்கள்? இந்தக் காலத்தில் காந்திய கொள்கைகள் எல்லாம் எடுபடுமா?’ எனப் பல கேள்விகளை மக்கள் கேட்பார்கள். தேர்தல் பரப்புரைக்காக பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. வசதியானவர்களும், பணம் கொடுப்பவர்களும், கும்பலாக வருபவர்களும் ஒருபோதும் உங்களுக்காக உழைக்க மாட்டார்கள் என்பதை, தொடர்ந்து மக்களிடம் சொல்லி வருகிறோம். இப்போதிருக்கும் எந்த மக்கள் பிரதிநிதியாவது அதிகாரிகளை நோக்கி லஞ்சம் வாங்கக் கூடாது எனப் பேச தைரியம் இருக்கிறதா? நான் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அது மாவட்ட ஆட்சியராகவே இருந்தாலும் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன். சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது. மதிப்புறு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறது. இந்திய யோகா கூட்டமைப்பு சார்பில் எனக்கு கர்மயோகி விருது வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்தான வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் இரண்டரை லட்சம் கடன் சுமை உள்ளதாகக் குறிப்பிட்டார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எனது குடும்பத்தின் சார்பில் 2 லட்சம் அடங்கிய காசோலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றேன். ஆனால் அதனை வாங்க மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டார். கிராமப்புறங்களில் அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை திறம்பட எடுத்துச் செல்லவும் அரசு அலுவலகங்களில் ஊழல் லஞ்சத்தை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறேன். ஒவ்வொரு குடியரசு மற்றும் சுதந்திர தினத்தின்போது இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் கிராமங்களுக்குச் சென்று கொடியேற்ற வேண்டும். அந்த வகையில் எங்கள் கிராமத்திற்கும் வந்து கொடியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் வாயிலாக மனு ஒன்றை அனுப்பி இருக்கிறேன். தற்கால மாணவர்களிடையே காந்தியும் சென்று சேரவில்லை… அது நிச்சயமாக சென்று சேர வேண்டும். அதனால்தான் இன்று வன்முறை போராட்டங்கள், மதுபோதையில் ஒரு தலைமுறையே சீரழிந்து கொண்டிருக்கிறது.”

இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டம் இருக்கிறதாமே!

“ஆம். இயக்குநர்களுக்கு கடிதம் எழுதும் திட்டத்தில்தான் இருக்கிறேன். இந்த சமூக சீரழிவுக்கு ஒரு விதத்தில் சினிமா இயக்குநர்களும் காரணமாக இருக்கிறார்கள். படத்தில் வன்முறைக் காட்சிகளும் ஆபாச சொல்லாடல்களும், போதை காட்சிகளும் சமூகத்தில் நஞ்சைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அதற்கு பதிலாக நல்ல கருத்துக்களையும் நல்ல அரசியலையும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். இந்தச் சமூகத்தை சீர்திருத்தும் வலிமை திரைத்துறைக்கு உண்டு. ஆனால் அதை தவறுதலாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். மனிதனை மனிதன் முதலில் மதிக்க வேண்டும். மதங்கள் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றவர்கள் மீது வெறுப்பைக் கக்குவதற்கு அல்ல. நாட்டில் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்து விட்டால் நாடு நிச்சயம் வல்லரசாக மாறும்… நாட்டில் பசி, வறுமை, பாதி சமூக தீமைகள் ஒழிந்து விடும். இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று நாமே நினைப்போம்! அதை நோக்கியது தான் எனது இந்தப் பயணம்” என்கிறார், காந்தியவாதி ரமேஷ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *