அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் அடங்கிய அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, சாலையில் போகிற, வருபவர்கள் எல்லாம் குழு அமைப்பது குறித்து கேள்வி கேட்பதாகவும், கே.சி.பழனிசாமி கட்சியிலேயே கிடையாது எனவும், ஓ.பன்னீர்செல்வத்துடன் சோ்ந்துவிட்டதாகவும் அவர் பதில் அளித்தார்.
இதையடுத்து, எடப்பாடி கே.பழனிசாமி மீது கே.சி.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடா்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கோவை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதித்துறை நடுவர் என்.கோபாலகிருஷ்ணன், இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கோவை நீதிமன்றத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.