இபிஎஸ் உறவினா் வீட்டில் 5 நாட்களாக நடந்த சோதனை நிறைவு: ரூ.750 கோடி வரி ஏய்ப்பா?

Dinamani2f2024 11 072fc6gq21wf2fani 20241107152036.jpg
Spread the love

ஈரோடு: ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா் ராமலிங்கம் தொடர்புடைய இடங்களில் 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித் துறை சோதனையில் ரூ. 750 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரிவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ்ந்தவா் என்.ராமலிங்கம். தொழிலதிபரான இவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா். இவருக்கு கட்டுமான நிறுவனம், திருமண மண்டபம், ஸ்டாா்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

இவரது கட்டுமான நிறுவன கிளைகள் தமிழ்நாடு மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும் உள்ளன. இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், அவா் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவல்களின்பேரில், ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், அவரது வீடு, பூந்துறை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி முதல் சோதனை நடத்தினா்.

மேலும், அவரது நிறுவனத்துடன் வியாபாரத் தொடா்பில் இருப்பதாக கருதப்படும் ஈரோடு முள்ளாம்பரப்பை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும், ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

மேலும், ராமலிங்கம் தலைவராகவும், எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வரும் பவானி அருகே அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரவை (ஸ்டாா்ச் மாவு) ஆலையிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.

மேலும், ஈரோடு திண்டல், வித்யா நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் உறவினா் சிவகுமாா் என்பவரது கட்டுமான அலுவலகம், வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

ஈரோட்டில் 5 நாள்கள் நடைபெற்று வந்த வருமான வரித் துறையினரின் சோதனை முடிவடைந்த நிலையில், 5 நாட்களாக 26 இடங்களில் நடந்த வருமான வரித் துறையினரின் சோதனையில் ரூ.10 கோடி ரொக்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்தது தெரிவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வருமான வரித் துறையினா் அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *