”இபிஎஸ் தனித்துதான் ஆட்சி அமைப்பார்; கூட்டணி ஆட்சி கிடையாது”: தம்பிதுரை | ”EPS will form government alone; there will be no coalition government”: Thambidurai

1358411.jpg
Spread the love

சென்னை: “தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது” என்று அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார். டாஸ்மாக் மதுபான முறைகேட்டில் ரூ. 1 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, ரூ. 40 ஆயிரம் கோடி ஊழல் என்று கூட அவர்கள் கூறுவார்கள் என தெரிவித்தார். அதன்படிதான், அமித் ஷாவும் டாஸ்மாக்கில் ரூ. 39,000 கோடி ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சாதாரணமாக யார் குற்றம் சாட்டினாலும் அவர்கள் மீது வழக்கு தொடுக்கும் ஸ்டாலின் அரசு, அமித் ஷா மீது வழக்கு தொடுக்குமா? அந்த தைரியம் ஸ்டாலினுக்கு உண்டா?

எடப்பாடி பழனிசாமி சரியான கூட்டணியை அமைத்திருக்கிறார். வக்பு மசோதா வருவதற்கு முன்பே, எடப்பாடி பழனிசாயி அமித் ஷாவைச் சந்தித்தார். அதிமுக எப்போதும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சி என்பதை எடுத்துக்கூறினார். ஜெயலலிதாவும் அப்படித்தான் இருந்திருக்கிறார் என்பதையும் எடுத்துக்கூறினார். இதன் காரணமாகவே, அதிமுக எம்பிக்கள் 4 பேரும் வக்பு மசோதாவை எதிர்த்து வாக்களித்தோம். எனவே, இஸ்லாமிய மக்கள் எங்களைவிட்டு செல்லவில்லை. அவர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். அதிமுக வாக்கு வங்கி குறையாது?

இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு, நோன்பு நோட்பதற்கு என பல்வேறு சலுகைகளை இஸ்லாமியர்களுக்குக் கொடுத்தது அதிமுதான். இஸ்லாமிய மக்களுக்கு இது தெரியும். அவர்களுக்கு ஆபத்து இருந்தால், நாங்கள் இந்த கூட்டணியில் சரியான முறையில் குரல் கொடுப்போம். விட்டுக்கொடுக்க மாட்டோம்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஏழை விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். அவருக்கு அடித்தட்டு மக்களின் சிரமங்கள் புரியும். பாஜகவோடு அதிமுக திடீரென கூட்டணி அமைக்கவில்லை. சென்ற செயற்குழு, பொதுக்குழுவில் அவருக்கு முழு அதிகாரம் தரப்பட்டது.

அந்த ஜனநாயக அடிப்படையில்தான் இப்போது அவர் பாஜகவோடு கூட்டணி அமைத்திருக்கிறார். இஸ்லாமியர்களின் ஓட்டு அதிமுகவுக்கே அதிகம் வரும். குறைய வாய்ப்பே இல்லை.

பழனிசாமி நேற்று சரியாக சொல்லி இருக்கிறார். 1952 முதல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. ராஜாஜி காலம் முதல் இதுவரை கூட்டணி ஆட்சி இருந்தது கிடையாது. தனிப்பெரும்பான்மை இல்லாதபோதும் ராஜாஜியும், கருணாநிதியும் கூட்டணி ஆட்சி அமைக்கவில்லை.

2006ல் ஒரு நிலைமை ஏற்பட்டது. திமுகவுக்கு 93 சீட்டுதான். பிரணாப் முகர்ஜி அப்போது இங்கு வந்தார். கூட்டணி ஆட்சி கேட்டார். கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை. அதேநிலைதான், தற்போதும். 2026ல் எடப்பாடி பழனிசாமி தனித்தேதான் ஆட்சி அமைப்பாரே தவிர, கூட்டணி ஆட்சி கிடையாது” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *