ராமநாதபுரம்: பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டதையடுத்து, அவரது 100-வது பிறந்த நாள் விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால்வளம் மற்றும் கதர் கிராமத்துறை அமைச்சர்ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், இமானுவேல் சேகரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர் பேசும்போது, “தமிழக முதல்வரின் உத்தரவின்படி இந்தாண்டு முதல் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. முதல்வர் உத்தரவுப்படி ரூ.3 கோடி மதிப்பில் பரமக்குடி நகர் பகுதியில் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணி இன்னும் 3 மாதங்களில் முடிவுறும் நிலையில் உள்ளது. இதேபோல் மக்களின் தேவையை உணர்ந்து திட்டங்களை செயல்படுத்தும் அரசாக தமிழக அரசு உள்ளது. நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக துணை முதல்வர் உதயநிதி வருகை தந்து சிறப்பித்து வருகிறார். இமானுவேல் சேகரனின் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது” என பேசினார்.
தொடர்ந்து உணவுப்பொருட்கள் வழங்கல் துறை மூலம் 276 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 346 பயனாளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.51.90 லட்சம் மதிப்பில் வீட்டு மனைப்பட்டாக்கள் என 622 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். அதனையடுத்து இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், ஏ.கே.எஸ். விஜயன், ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், நவாஸ்கனி எம்பி, எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் ஆகியோர் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜ், எம்எல்ஏக்கள் தமிழரசி (மானாமதுரை), சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசைவீரன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா, இமானுவேல் சேகரனின் மகள் பிரபாராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, வட்டாட்சியர் சாந்தி, உதவி மக்கள் தொடர்பு அலுவுலர் (செய்தி) விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை: இமானுவேல் சேகரன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படம் மற்றும் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், பல்வேறு கிராம மக்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். பரமக்குடி பொன்னையாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில், பொன்னையாபுரம், பாலன்நகர், எம்ஜிஆர் நகர் பொதுமக்கள் மற்றும் பிரண்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 100 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.