மழை, வெள்ளம், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து, அனைத்துவகை நிவாரண நடவடிக்கையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
வட கிழக்கு பருவ மழை மற்றும் ஃபெஞ்சன் புயலின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பாதிப்புகளை கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
மனித உயிர்கள் இழப்பு, விவசாயம், கால்நடைகள், மற்றும் குடியிருப்புகள் பாதிப்புகளை கணக்கில் கொண்டு நிவாரணங்களையும் முதல்வர் அறிவித்துள்ளார். நிவாரணத் தொகை ஓரளவிற்கு ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும் கூட உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் என அறிவித்துள்ளதை மறுபரிசீலனை செய்து, ரூ.10 லட்சம் என அறிவிக்க கோருகிறோம்.