இயல்பு நிலைக்குத் திரும்பும் புதுச்சேரி கிராமங்கள்; கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து | Puducherry Villages Returning to Normalcy; Traffic again on Cuddalore Road

1342149.jpg
Spread the love

புதுச்சேரி: புதுச்சேரி கிராமப்புறங்களில் புகுந்த வெள்ளநீர் வடிய தொடங்கியுள்ளது. புதுச்சேரி – கடலூர் சாலையில் புதன்கிழமை மதியம் முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொருட்கள் | படங்கள்: எம்.சாம்ராஜ்

ஃபெஞ்சல் புயல் மழையால் புதுச்சேரி மற்றும் கிராப்புறங்கள் வெள்ளக்காடானது. தொடர் கனமழை மற்றும் சாத்தனூர் அணை, வீடூர் அணை திறப்பினால் சுண்ணாம்பாறு மற்றும் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் சோரியாங்குப்பம், ஆராயச்சிக்குப்பம், பாகூர் உள்ளிட்ட ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்கள் மட்டுமின்றி சுமார் 10 கி.மீ சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மூன்றாவது நாளான புதன்கிழமை பாகூர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளநீர் படிப்படியாக வடிந்தது. ஆனாலும் தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் வடிந்த இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்ப தொடங்கியுள்ளது. இந்நிலையில் வீடுகளில் உள்ளே இருக்கும் சேறு சகதிகளை அப்புறப்படுத்தும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சோரியாங்குப்பம், இருளஞ்சந்தை, பாகூர் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளநீரில் சேதமான வீட்டு உபயோகப் பொருட்கள், மாணவர்களின் நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை சாலையில் காய வைத்தனர். பலரது வீடுகள் சேதமடைந்துள்ளதால் அவர்கள் தொடர்ந்து தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாமல் உள்ளதால், அவர்களுக்கு வருவாய் துறை மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மணவெளி தொகுதி என்.ஆர்.நகரில் மழை வெள்ளத்தால் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததை காண்பிக்கும் பெண். | படம்: எம்.சாம்ராஜ்

ரெட்டிச்சாவடி, கிருமாம்பாக்கத்தில் சாலையின் குறுக்கே தொடர்ந்து வெள்ள நீர் செல்வதால் 3-வது நாளான புதன்கிழமை காலை முதல் கடலுார் – புதுச்சேரி சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. பிற்பகலுக்கு பிறகு வெள்ள நீர் குறைந்து வடிய தொடங்கியது. இந்நிலையில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து எஸ்பி மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தலைமையில் போலீஸார் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

வெள்ளத்தால் அடித்து சாய்க்கப்பட்ட சாலை தடுப்பு கட்டைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் சரி செய்தனர். இதையடுத்து புதன்கிழமை பிற்பகலுக்கு பிறகு புதுச்சேரி – கடலுார் சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. வெள்ளப் பெருக்கினால் கடலூர் – புதுச்சேரி சாலை, குருவிநத்தம் சித்தேரி சாலை, கொம்மந்தான்மேடு சாலை, ஆராயச்சிக்குப்பம் சாலை, அரங்கனூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது.

தொடர்ந்து தென்பெண்ணையாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் சித்தேரி அணைக்கட்டில், பல அடி உயரத்துக்கு அணைக்கட்டை தாண்டி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. தண்ணீரின் வேகம் காரணமாக கொம்மந்தான்மேடு படுகை அணையில் இணைப்பு பகுதிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்த பாதிப்புகள் குறித்த விவரம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *