மும்பை: பஞ்சவடி விரைவு ரயில், நாசிக் மாவட்டத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ரயில் பெட்டிகள் துண்டிக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்து விபத்து நேரிட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதிவிரைவு ரயிலான பஞ்சவடி விரைவு ரயில், மும்பையிலிருந்து மன்மத் இடையே இயக்கப்படுகிறது.
உடனடியாக விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள், ரயில் பெட்டிகளை இணைத்து 40 நிமிடத்துக்குப் பிறகு ரயில் புறப்பட்டுச சென்றது.
நாசிக் மாவட்டம் மன்மத் சந்திப்பிலிருந்து இன்று காலை தனது பயணத்தைத் தொடங்கியது. மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கசரா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. 8.40 மணிக்கு திடீரென ரயிலின் 4 மற்றும் ஐந்தாவது பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகள் துண்டிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
உடனடியாக ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயில் புறப்பட்டுச் சென்றது. முதற்கட்டமாக, ரயில் பெட்டிகள் பல்வேறு காரணங்களால் துண்டிக்கப்படலாம். ரயில் சென்றுகொண்டிருக்கும்போது திடீரென வேகத்தை அதிகரித்தல் அல்லது வேகத்தைக் குறைக்கும்போது ஏற்படும் அதிர்வுகளால் இது நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.