`இரண்டாவது குழந்தைக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை' – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடித் திட்டம்

Spread the love

தென்னிந்திய மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் தொகை குறைந்துவருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவ்வப்போது பேசிவருகின்றனர். மேலும், மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி தொகுதி பிரிக்க வேண்டும் என்ற பா.ஜ.க அரசின் திட்டத்தால் தென்னிந்திய எம்.பி-களின் எண்ணிக்கை குறையும் என்ற சூழல் நிலவுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை ஈடுகட்ட, இரண்டாவது குழந்தை பெறும் தம்பதிகளுக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை ஆந்திர அரசு பரிசீலித்து வருவதாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

இது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “மாநிலத்தின் மக்கள் தொகை சமநிலையை இழந்துவருவது கவலையளிக்கிறது. ஆந்திராவின் தற்போதைய மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 1.5 ஆக உள்ளது. இது மக்கள் தொகை மாற்றத்திற்குத் தேவையான சராசரி அளவான 2.1-ஐ விடக் குறைவு. அதை உயர்த்த வேண்டும் என்ற முடிவை இந்த அரசு ஆலோசித்து வருகிறது. அதன் அடிப்படையில், நாங்கள் ஒரு புதிய முறையை ஆய்வு செய்து வருகிறோம்.

இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் பெற்றோருக்குப் பிரசவத்தின்போது ரூ. 25,000 ஊக்கத்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இது மக்களிடையே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். பல நாடுகள் தற்போது இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாகப் பொருளாதாரச் சவால்களைச் சந்திக்கின்றன. ஆந்திராவிலும் எதிர்காலத்தில் இத்தகைய சூழல் ஏற்படாமல் தடுக்க இப்போதே நடவடிக்கை எடுப்பது அவசியம். மார்ச் மாத இறுதிக்குள் ‘மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை’ வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *