தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும் சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டும்.
சிலர் படுத்தவுடன் தூங்கிவிடுவதெல்லாம் உண்மையில் வரம்தான். சிலர் நாள் முழுவதும் உழைத்து களைத்து வந்தாலும் தூக்கம் வராது. தூங்காமல் இருப்பது உடலின் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
இரவு தூக்கம் வராதவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..
உணவு
ஊட்டச்சத்து இல்லாத துரித, பொருந்தா உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக செரிமானம் கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.
பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
குறிப்பாக தூக்கத்திற்கான மெலடோனின் சுரப்பை அதிகப்படுத்தும் சிக்கன், முட்டை, கடல் உணவுகள் என புரதம் அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பாஸ்தா, ரொட்டி, அரிசி, உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நள்ளிரவில் சாப்பிடுவது
சிலருக்கு இரவு சாப்பிடாவிட்டால் தூக்கம் வராது என்று கூறுவார்கள். இரவு சாப்பிடாமல் படுப்பது சரியல்லதான். குறைந்த அளவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால், சிலர் பசி காரணமாக நள்ளிரவில் எழுந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். இது முற்றிலும் தவறு.
அதிலும் குறிப்பாக நொறுக்குத் தீனிகளை நள்ளிரவு சாப்பிடக்கூடாது.
நள்ளிரவு பசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஒரு பழம் சாப்பிடலாம். மாறாக, அரிசி உணவுகள், ஸ்நாக்ஸ் சாப்பிடுவது உடல் இயக்கத்தை சீர்குலைக்கும். இது தூக்கத்தையும் கெடுக்கும்.
சிலர் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர்தான் சாப்பிடுவார்கள். இது செரிமானத்தில் கோளாறை ஏற்படுத்துவதுடன் உடல் பிரச்னைகளை உண்டுபண்ணும்.
இரவு தூங்கச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதுபோல இரவில் வயிற்றை முழுவதும் நிரப்பக்கூடாது. பகல் நேர உணவு அளவில் பாதி சாப்பிடலாம். எளிதாக செரிமானம் அடையும் உணவுகளை சாப்பிடுங்கள். நல்ல தூக்கம் கிடைக்கும்.
பால்
டிரிப்டோபன், மெலடோனின் இந்த இரண்டும் பாலில் உள்ள மூலக்கூறுகள். மூளை வெளியிடும் மெலடோனின், தூக்க ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது,
உடலை தூக்கத்திற்கு தயார்படுத்துகிறது. டிரிப்டோபன், மெலடோனின் இரண்டும் நல்ல தூக்கத்திற்கு உதவும்.
இவை இரண்டும் பாலில் இருப்பதால் இரவு தூக்கத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ஒரு தம்ளர் பால் அருந்தலாம்.
நட்ஸ்
பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, முந்திரி ஆகியவை தூக்கத்திற்கு உதவும் உணவுகள். இவற்றில் மெலடோனின், மெக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்டவை. இருக்கின்றன. இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இரவு உணவிற்கு முன் இந்த உணவுகளை சாப்பிட்டால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.