ஹரியாணா பேரவைத் தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 61.19% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்றிருந்தனர். இவா்களுக்காக 20,629 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. களத்தில் மொத்தம் 1,031 வேட்பாளா்கள் உள்ளனர்.
தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனியும், காங்கிரஸின் முதல்வர் வேட்பாளாராக பூபிந்தர் சிங் ஹுடாவும் களமிறங்கியுள்ளனர். எதிர்க்கட்சியான காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் ஓரிடத்திலும் களத்தில் உள்ளன. இதுதவிர, ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தளம், ஜனநாயக ஜனதா கட்சி ஆகியவையும் மோதுவதால் பலமுனைப் போட்டி நிலவுகிறது.