`இருக்கு ஆனா… இல்ல!’ – ஆம்னி பேருந்துகளின் தொடரும் அட்ராசிட்டி… அபராத அடி கொடுத்த நீதிமன்றம்!

Spread the love

பண்டிகைக் காலங்களில் மட்டுமல்ல… இப்போதெல்லாம் வாராந்திர விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கே நகர்ப்புறங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு சர்வ சாதாரணமாக பலரும் சென்று வருகின்றனர். இதனால், பேருந்துகள், ரயில்கள் எப்போதுமே நிரம்பி வருகின்றன. ஆனாலும், எவ்வளவு பணத்தையும் செலவு செய்யப் பலரும் தயாராகவே உள்ளனர். இதைப் பயன்படுத்திக் கொண்டு, ரயில்களில் தட்கல், பிரீமியம் தட்கல் என்று அரசாங்கமே கொள்ளை யடிக்கிறது. மறுபுறம், மீட்டர் வட்டி போல கட்டணத்தை உயர்த்தி உயர்த்தி வசூலிப்பதை வாடிக்கையாகவே வைத்துள்ளன, பெரும்பாலான ஆம்னி பேருந்து நிறுவனங்கள்.

போட்டோவுக்குப் போஸ்… நடவடிக்கை ஜீரோ!

அமைச்சர், போக்குவரத்துத் துறை அலுவலர்கள், ‘விதிகளை மீறினால், கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை’ என்று வீராவேசமாக முழங்குவார்கள். பண்டிகை காலங்களில் ஒன்றிரண்டு பேருந்துகளை மடக்கி, ‘விதிகளை மீறி இயக்கிய ஆம்னி பஸ்கள் பறிமுதல்’ என்று போட்டோவுடன் போஸ் எல்லாம் கொடுப்பார்கள். ஆனாலும்… யார் என்ன கூறினாலும் பெரும்பாலான ஆம்னி பஸ்களின் அட்ராசிட்டி தொடர்கதையே.

இந்த நிலையில், பயணிகளை கவர்வதற் காக பல்வேறு வசதிகளையும் செய்திருப்பதாக விளம்பரப்படுத்தும் சில ஆம்னி பேருந்துகள் அதையெல்லாம் செய்யாமல் ஏமாற்றும் வேலைகளும் நடக்கின்றன.

இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், சென்னை (வடக்கு) நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து நிறுவனத்துக்கு அதிரடியாக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சதீஷ்குமார், கடந்த மே மாதம் சென்னை யில் இருந்து கோவைக்கு பிரபல தனியார் நிறுவனத்தின் கழிவறை வசதியுள்ள ஆம்னி பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின் போது கழிவறையைப் பயன்படுத்த முயல, ‘சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். மலம் கழிக்கக் கூடாது மீறினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என பேருந்து ஊழியர் தெரிவித்துள்ளார். அது தொடர்பான எச்சரிக்கை வாசகத்தையும் பேருந்தில் ஒட்டியிருக்கின்றனர். இதை யடுத்துதான், அவர் வழக்குத் தொடுத்துள்ளார்.

நியாயமற்ற பேருந்துகள்… கண்டித்த நீதிமன்றம்!

அதை விசாரித்த நீதிமன்றம், ‘`கழிவறை வசதி இருப்பதாகக் கூறிவிட்டு, அனுமதிக்க மறுப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறையின் கீழ் வரும். வசதிகள் குறித்து விளம்பரத்தில் குறிப்பிட்ட பிறகு, எந்த நிபந்தனைகளும் இன்றி பயணிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், தவறான விளம்பரத்தை இணையதளத்தில் இருந்து உடனே நீக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும். தவறினால் 9 சதவிகித வட்டியுடன் வழங்க வேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டிருக் கிறது.

ஒரு புகார்… இப்படி வெளியில் வந்துள்ளது. ஆனால், பெரும்பாலானோர் இதையெல்லாம் சகித்துக்கொண்டோ அல்லது பேருந்து ஊழியர்களுடன் சண்டையிட்டோ… தங்களுடைய கோபத்தைத் தணித்துக் கொண்டு இறங்கிப்போய் விடுகிறார்கள். ஒரு சிலர் தங்கள் முகநூல் பக்கங்களில் கோபத்தைக் கொட்டித் தீர்க்கின்றனர். அப்படி, தன்னுடைய கோபத்தை வெளிப் படுத்தியிருந்த சென்னையைச் சேர்ந்த கஸாலி முகமதுவிடம் பேசினோம்…

கழிவறை சுத்தமாக இல்லை… ஏசியும் போடவில்லை!

“கடந்த அக்டோபர் 22-ம் தேதி கோவையில் இருந்து சென்னைக்கு ‘Intrcity smart’ என்ற நிறுவனத்தின் பேருந்தில் பயணித்தேன். கழிவறையைப் பயன்படுத்தச் சென்றேன். ஆனால், கொஞ்சம்கூட சுத்தம் செய்யப்படாமல், செருப்பு மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் தேங்கியிருந்தது. பஸ் டிரைவர் மற்றும் நடத்துநரிடம் சொன்ன போது, என்னை முறைத்துப் பார்த்தார்களே தவிர, சுத்தம் செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. சென்னை வரைக்குமே சுத்தம் செய்யப் படவில்லை.

நான் இந்தப் பேருந்தை புக் செய்ததன் நோக்கமே, கழிவறை வசதி இருக்கிறது என்பதால்தான். ஆனால், அதற்குப் பலன் இல்லாமல் போய்விட்டது. இந்தப் பேருந்தில் ஏ.சி-யையும் சரியாகப் போடவில்லை. அதைப் போடச் சொன்னதற்கும் கேவலமாகப் பார்த்தார்கள்.

இது தொடர்பாக பேருந்து நிறுவனத்துக்குப் புகார் அனுப்பிய பிறகு, போனில் அழைத்துக் கேட்டார்கள். எல்லா புகார்களையும் சொன்னேன். இனி உங்கள் பேருந்தில் பயணிக்கவே மாட்டேன் என்றும் சொன்னேன். ‘ஓகே சார்… மேல சொல்றோம் சார்…’ என்று மட்டுமே அவர்களிடமிருந்து பதிலாக வந்தது. இதையடுத்துதான், சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். அதற்கு நிறைய வரவேற்பு. நிறைய பேர், ‘இந்த பஸ் நல்லா இல்ல’ என்று கமென்ட் பதிவிட்டனர்’’ என்று சொன்ன கஸாலி,

வரி வசூலிக்கும் அரசாங்கம் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்!

“நீண்டதூர பேருந்துகள் அனைத்திலும் கழிவறை வசதி கண்டிப்பாக செய்யப்பட வேண்டும். அதேபோல, கழிவறை வசதிகள் இருக்கிறது என்று விளம்பரப்படுத்திவிட்டு, சிறுநீர் மட்டும்தான் கழிக்க வேண்டும் என்று சொல்வது… பயன்படுத்தவே முடியாத அளவுக்கு கேவலமாக வைத்திருப்பது கூடாது. இதையெல்லாம் பேருந்து நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஆம்னி பேருந்துகளிடம் பல்லாயிரக்கணக்கில் வரியை வசூலிக்கும் அரசாங்கம் இதை யெல்லாம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் கோரிக்கை வைத்தார்.

கஸாலி முகமது, அன்பழகன்

பிரச்னை உண்மைதான்… ஆனால்?

இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகனிடம் கேட்டபோது, “பெரும்பாலான ஆம்னி பேருந்துகளில் சிறுநீர் கழிப்பதற்கு மட்டும்தான் வசதி உள்ளது. மலம் கழிக்கும் வசதி இல்லை. ஏற்கெனவே இத்தகைய பேருந்தில் பயணித்தவர்கள், சிறுநீர் கழிக்கும் வசதி மட்டும்தான் உள்ளது என்பதை புரிந்து கொள்கிறார்கள். புதியவர்கள், பேருந்தில் ஏறிய பிறகே இதை அறிந்து அதிருப்தியைத் தெரிவிக்கின்றனர். ‘மலம் கழிக்கும் வசதி யில்லை’ என்று இணையத்தில் தெளிவாகக் குறிப்பிடாதது பேருந்து நிறுவனங்களின் தவறுதான்.

பேருந்து கழிவறையைப் பொறுத்தவரை பல்வேறு நடை முறை சிக்கல்களும் உள்ளன. ‘கழிவறை விரைவாக நிரம்புகிறது. கழிவறையிலும் பேருந்துக்குள்ளும் துர்நாற்றம் வீசுகிறது’ என்கிற புகார்களும் வருகின்றன. இதெல்லாம் உண்மை என்றாலும் தீர்வு காண்பது கடினமாக உள்ளது.

ஏனெனில், ரயிலில் இருப்பதுபோல் பேருந்தில் கழிவுகளை வழியிலேயே கொட்ட இயலாது. அதனால்தான் பேருந்தில் கழிவுகள் உடனே நிரம்பி விடுகின்றன. உடனுக்குடன் கழிவறையை சுத்தம் செய்யவும் முடியாத சூழ்நிலை உள்ளது. முக்கியமான நிறுத்துமிடமான சென்னையில் கழிவறையைச் சுத்தம் செய்தால், பிறகு கோயம்புத்தூரில்தான் மீண்டும் சுத்தம் செய்ய இயலும். இடையில் சுத்தம் செய்ய வாய்ப்பு இல்லை. இதனாலேயே சில நிறுவனங்கள் பேருந்துகளில் கழிவறை வசதியை நீக்கி வருகின்றன.

அனைத்துப் பயணிகளும் பேருந்தில் முழுமையாக கழிவறையைப் பயன்படுத்தக் கூடிய வகையில் தொழில்நுட்ப மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் நிரந்தர தீர்வு. அதற்காக முயற்சி செய்து வருகிறோம்’’ என்றவர்,

எங்களிடம் புகார் அளித்தால், நிச்சயம் நடவடிக்கை உண்டு!

‘`ஆம்னி பேருந்துகள் குறித்த புகார்கள் இருந்தால், அரசிடம் அல்லது நீதிமன்றத்தில் செல்லத் தேவையில்லை. ஆம்னி பேருந்துகள் சங்கத்திடம் புகார் அளிக்கலாம். எங்களிடம் வந்த பல்வேறு புகார்களுக்கும் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்’’ என்று சொன்னார்.

பயணிகள் நிம்மதியாகவும், சுகாதாரமான சூழலிலும் பயணிப்பதற்காகத்தான் கூடுதல் கட்டணத்தைக்கூட கொட்டிக் கொடுக் கிறார்கள்.

ஒன்று, போதுமான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் அல்லது கட்டணத்தையாவது குறைக்க வேண்டும். அரசாங்கமும் பேருந்து உரிமையாளர்களும் இணைந்து இதற்கான நிரந்தரத் தீர்வை உருவாக்க வேண்டும்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *