‘இரும்பின் தொன்மை’ முதல் டங்ஸ்டன் சுரங்க ரத்து வரை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | CM Stalin letter to DMK Party Members

1348573.jpg
Spread the love

சென்னை: “தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது” என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது திராவிட மாடல் அரசு. மக்கள் அரசின் மீது தமிழகம் எந்தளவு நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் மதுரையில் மக்கள் பெருந்திரளுடன் நடைபெற்ற பாராட்டுக் கூட்டம் மெய்ப்பித்திருக்கிறது.

தமிழர்களின் பண்பாடும், நாகரிகமும் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை அண்மையில் வெளியிடப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ என்கின்ற ஆய்வறிக்கையின் மூலம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர்கள் இரும்புத் தாதிலிருந்து, இரும்பைப் பிரித்து எடுத்து, கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்த உலகின் மூத்த முன்னோடி நாகரிகம் என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம்.

மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாபட்டி எனும் பழம்பெருமை வாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க, பல்லுயிர்ச் சூழல் கொண்ட பகுதியில் டங்ஸ்டன் என்கின்ற கனிமத்தை எடுப்பதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டபோது, அதனைத் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை எதிர்த்து நின்றது திமுக. டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு மத்திய பாஜக அரசு சட்ட விதிகளைத் திருத்தி ஏலம் விடுவதற்கு முனைப்பு காட்டிய போது, அதற்கும் கண்டனம் தெரிவித்துச் செயல்பட்டது திராவிட மாடல் அரசு.

டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஏலம் விட்டு, தங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கக் கூடாது என்று மதுரை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் தங்கள் கிராமசபைக் கூட்டங்களில் கருத்துகளைத் தெரிவித்தபோது, “உங்களுக்கு என்றும் துணையாக இருப்போம்” என்று அவர்களுக்கு உறுதி அளித்தவர் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி.

திராவிட மாடல் அரசு மதுரையில் டங்ஸ்டன் கனிமத்தை எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து, கட்சியின் எம்.பி.க்களும் தோழமைக் கட்சிகளின் எம்.பி.க்களும் இதனை நாடாளுமன்ற விவாதங்களில் உறுதியான குரலில் எதிரொலித்தனர். சட்டமன்றத்திலும் இதற்கான தீர்மானத்தை முறையில் நான் முன்னெடுத்து, மக்களின் குரலாக ஒலித்தேன். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமின்றி நம் தோழமைக் கட்சியினர், மாற்றுக் கட்சியினர் ஆகியோருடன் எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து ஆதரிக்கின்ற அளவில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.

மதுரை மக்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் டங்ஸ்டன் கனிம ஏலத்துக்கு எதிராக நடத்திய மாபெரும் மக்கள் பேரணியை சிறு அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில், அழுத்தமான வகையில், அறவழியில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு அரசு உறுதுணையாக இருந்தது. இந்தப் பேரணி நடைபெற்றபோது அமைச்சர் மூர்த்தி ஒவ்வொரு கட்டத்திலும் என்னைத் தொடர்பு கொண்டு மக்களின் உணர்வையும், அவர்களின் கட்டுப்பாட்டையும் விளக்கிக் கொண்டே இருந்தார்.

அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும், திராவிட மாடல் அரசின் ஆதரவுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியும் மத்திய பாஜக அரசைப் பணியச் செய்தது. டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியைக் கைவிடுவதாக மத்திய அரசிடமிருந்து அறிவிப்பு வெளியானது.

திராவிட மாடல் அரசின் உறுதியான நிலைப்பாட்டுடன் மக்கள் முன்னெடுத்த போராட்டத்துக்கு கிடைத்த இந்த வெற்றியை அடுத்து, அரிட்டாபட்டி மக்கள் பிரதிநிதிகள் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மூர்த்தியின் வழியாக என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தங்களுடைய பாராட்டுகளை நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புக்கட்டளை விடுத்தனர். இது ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி என்பதால் தமிழகத்தின் முதல்வராக நானும் அதில் கலந்துகொண்டேன்.

டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம ஏலங்கள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர் தன்னுடைய கருத்தை பாஜகவுக்கு ஆதரவாகத் தெரிவித்து இருந்தபோதும், சட்டமன்றத்தில் டங்ஸ்டன் ஏலத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிமுக ஆதரித்ததையும் மற்ற கட்சிகள் ஆதரித்ததையும் மனதாரப் பாராட்டி, இது தமிழகத்தின் வெற்றி என்பதை அரிட்டாபட்டி மக்களிடம் தெரிவித்தேன்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரான எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி காண்பதில் திராவிட மாடல அரசு உறுதியாக இருக்கிறது. டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்தை மக்களின் ஆதரவுடன் ரத்து செய்த பெருமையுடன், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் ஆய்வுப் பணியை மேற்கொள்கிறேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *