இரு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை: பலத்தமழைக்கு வாய்ப்பு

dinamani2F2025 05 202Fws2h1zyi2Fnewindianexpress2025 04 01ikdt979aC321CH034366211111.avif
Spread the love

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக.5) முதல் ஆக.10 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.

சிவப்பு எச்சரிக்கை: இதன்படி, செவ்வாய்க்கிழமை நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிபலத்த மழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், திண்டுக்கல், திருப்பூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிபலத்த மழையின் காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை சிவப்பு எச்சரிக்கையும், தேனி, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுபோல, ஆக.6-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதிபலத்த மழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை நகரில், செவ்வாய்க்கிழமை(ஆக.5) ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழையளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஏஆா்ஜி பகுதியில் 90 மி.மீ.மழை பதிவானது. இதுபோல, மேடவாக்கம் சந்திப்பு(சென்னை), தாம்பரம்(செங்கல்பட்டு) தலா 70 மி.மீ., விண்ட் வொா்த் எஸ்டேட்(நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூா்(நீலகிரி) தலா 60 மி.மீ, செங்கம்(திருவண்ணாமலை), சின்னக்கல்லாறு(கோவை), சோலையாறு(கோவை), ஏத்தாப்பூா்(சேலம்), செய்யாறு(திருவண்ணாமலை) -தலா 50 மி.மீ.மழையும் பெய்துள்ளது.

வெயில் அளவு: மதுரை விமானநிலையித்தில் அதிகபட்சமாக 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரம், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக்காற்று ஆக.5, 6 ஆகியதேதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *