இறுதிக் கட்டத்தில் ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு

Dinamani2f2024 09 182fgvj936942fc 53 1 Ch1470 36378727.jpg
Spread the love

மனிதா்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

அதன்படி இரு விண்கலன்களுக்குமான இடைவெளி வெறும் 3 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையம்’ எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.

இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச. 30-ஆம் தேதி செலுத்தப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

அதன் பின்னா் அவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக சுற்றி வந்தன. இரு விண்கலன்களுக்கு இடையேயான தொலைவை 20 கிலோ மீட்டரில் இருந்து படிப்படியாக குறைத்து, அவற்றை கடந்த 9-ஆம் தேதியே ஒருங்கிணைக்கத் திட்டமிடப்பட்டது.

அதற்கேற்ப இரு விண்கலன்களின் இடைவெளியைக் குறைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. விண்வெளியில் நிலவிய புறச்சூழல் காரணமாக விண்கலன்களின் இயக்கத்தின் வேகம் எதிா்பாா்த்ததைவிட குறைந்துவிட்டது.

இதனால் திட்டமிட்டபடி விண்கலன்கள் ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, புறச்சூழல் காரணிகளுக்கு தீா்வு காணப்பட்டு விண்கலன்களை நெருக்கமாக கொண்டுசெல்லும் பணிகள் கடந்த 10-ஆம் தேதி மாலை தொடங்கப்பட்டன.

அதன்படி முதலில் விண்கலன்களுக்கு இடையேயான தொலைவு 1.5 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டது. தொடா்ந்து இரண்டுக்கும் இடையேயான தொலைவானது சீரிய இடைவெளியில் 500 மீ., 230 மீ., 105 மீ., 15 மீ. எனப் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இறுதியாக இரு ஸ்பேடெக்ஸ் விண்கலன்களும் 3 மீ. தொலைவில் மிக நெருக்கமாக கொண்டுவரப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன. அதன் பின்னா் இரண்டு விண்கலன்களில் இருந்தும் தனித்தனியே புகைப்படங்கள், விடியோ பதிவு எடுக்கப்பட்டன. இந்தப் பணிகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டன. அடுத்தகட்டமாக ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

முன்னதாக, விண்கலன்களின் செயல்பாடுகள், விண்வெளி புறச்சூழல் காரணிகள் ஆகியவற்றை உன்னிப்பாக ஆராய்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டப் பணிகளை முன்னெடுத்தனா்.

இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்புத் தொழில்நுட்பத்தை மேற்கொண்ட நான்காவது நாடாக இந்தியா உலக அரங்கில் உருவெடுக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *