தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிந்தைய இறுதி வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (பிப்.23) வெளியிடப்பட்டுள்ளது. இதனை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்:
“எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2026 அன்று வெளியிடப்பட்டது. அதில், ஆண் வாக்காளர்கள்: 2,66,63,233, பெண் வாக்காளர்கள்: 2,77,06,332, மூன்றாம் பாலினத்தவர்: 7,191 என மொத்தம்: 5,43,76,756 வாக்காளர்கள் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில், ஆண்கள்: 2,77,38,925, பெண்கள்: 2,89,60,838, மூன்றாம் பாலினம்: 7617 என மொத்தம் 5,67,07,380 பெயர் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியலை காட்டிலும் இறுதி வாக்காளர் பட்டியலில் 23.30 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு மொத்தம் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மீண்டும் பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்”.
மேலும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறாதா என்பதை voter helpline app என்ற செயலி மற்றும் http://voters.eci.gov.in, http://electoralsearch.eci.gov.in மூலம் சரிபார்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
